நீலகிரியில் ‘சத்தமில்லாமல் ஒரு கல்விச்சேவை’ பழங்குடியின மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியை

1 week ago 1

*சமூக ஆர்வலர்கள் பாராட்டு

கூடலூர் : கூடலூர் அருகே பழங்குடியின மாணவர்களின் வீடுகளுக்கு மாலை 6 மணிக்கு மேல் சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியை சேவைக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்த ஸ்ரீ மதுரை ஊராட்சியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணி புரிபவர் கனகமணி.

ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பழங்குடியின கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மாணவ மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். அரசு பள்ளிகளில் சேர்ந்து பயிலும் பழங்குடியின மாணவ மாணவிகள் பல்வேறு சூழல்களால் அடிக்கடி பள்ளிக்கு வருவதை தவிர்த்து விடுகின்றனர்.

இவர்களை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினர் பெற்றோர் – ஆசிரியர் கழகத்தினர் கண்காணித்து மீண்டும் பள்ளிக்கு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி வருகின்றனர். நேற்று கணித பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத வேண்டிய நேரத்தில் பழங்குடியின மாணவர்கள் சிலர் பள்ளிக்கு வராமல் இருந்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் தேர்வை சரியாக எழுதும் வகையில் ஆசிரியர் கனகமணி தேர்வு எழுத வேண்டிய நேரத்தில் பள்ளிக்கு வராமல் உள்ள பழங்குடியின மாணவ மாணவிகளின் வீடுகளுக்கு மாலை நேரத்தில் நேரில் சென்று கடந்த சில தினங்களாக பாடம் நடத்தி வந்துள்ளார். இரவு 10 மணி வரையிலும் பழங்குடியின கிராமங்களில் உள்ள மாணவர்களின் வீடுகளுக்கு சென்று கணித பாடத்தை நடத்தி உள்ளார்.

இதனைத்தொடர்ந்து நேற்று அந்த மாணவர்கள் கணித பாடத்திற்கான தேர்வு எழுதி உள்ளனர். ஆசிரியர் இரவு நேரத்தில் பழங்குடியின மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்துவதற்கு வசதியாக அவரது கணவர் வேலுச்சாமி உறுதுணையாக இருந்துள்ளார். பகல் நேரங்களில் மாணவர்களை தேடிச்சென்றால் அவர்கள் ஆசிரியரை பார்த்து ஓடி ஒளிந்து விடுகின்றனர்.

இதன் காரணமாகவே மாலை 6 மணிக்கு மேல் வீடுகளுக்கு சென்று பெற்றோர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தி மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார். இதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில், தன்னலமின்றி, ‘சத்தமில்லாமல் கல்வி சேவையாற்றும்’ அரசு பள்ளி ஆசிரியை கனகமணிக்கு சமூக ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

The post நீலகிரியில் ‘சத்தமில்லாமல் ஒரு கல்விச்சேவை’ பழங்குடியின மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியை appeared first on Dinakaran.

Read Entire Article