
நீலகிரி,
சுற்றுலா தலமான நீலகிரிக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் தினமும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கபட்டு உள்ளது.
இதன்படி ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் இறுதி வரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களை மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்குமாறு சென்னை ஐகோர்ட்டு கட்டுப்பாடு விதித்தது.
அதன்படி, நேற்று முதல் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. ஒவ்வொரு நாளும் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.
இதற்கிடையில், தங்கள் வாழ்வாதாரத்திற்கு சுற்றுலாவை மட்டுமே நம்பியுள்ள நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள், இ-பாஸ் நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டம் முழுவதும் வியாபாரிகள் இன்று 24 மணி நேர முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன்படி மாவட்டம் முழுவதும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஆவின் பாலகம் மற்றும் மருந்தகங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. கடைகள் அடைக்கப்பட்டிருப்பதால் நீலகிரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் அவதிடையுள்ளனர்.
மேலும் உணவகங்கள், விடுதிகள் ஆகியவையும் மூடப்பட்டிருப்பதால், குடும்பத்துடன் நீலகிரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் விடுதி அறைகள் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே, தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இனி வரும் காலங்களில் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.