நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு; போதிய வருவாய் இல்லாததால் வாடகை வீடுகளாக மாறும் காட்டேஜ்கள்

3 hours ago 2

ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு வெளியூர் வாகனங்கள் வர விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. போதிய வருவாய் இல்லாததால் காட்டேஜ்கள், வாடகை வீடுகளாக மாறி வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால் நீலகிரியில் வரும் ஆண்டுகளில் சுற்றுலா தொழிலே காணாமல் போய்விடும் என கவலை தெரிவிக்கின்றனர்.

மலைகளின் அரசி என வர்ணிக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், பச்சைநிற கம்பளம் விரித்தது போல் காட்சியளிக்கும் புல்வெளிகள், வனப்பகுதிகள், எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்கள், நீர் வீழ்ச்சிகள், அணைகள் மற்றும் காய்கறி தோட்டங்கள் உள்ளன. மேலும், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கட்டிடங்கள் நீலகிரியின் அழகிற்கு அழகு சேர்க்கின்றன. இங்கு ஆண்டு முழுவதும் நிலவ கூடிய இதமான காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கோடை சீசனில் ஏப்ரல், மே மாதங்களில் சமவெளி பகுதிகள், அண்டை மாநிலங்களில் கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து தப்பித்து கொள்வதற்காக இச்சமயங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியை நோக்கி படையெடுப்பார்கள்.

லட்சக்கணக்கில் குவியும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் நோக்கில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, படகு போட்டி, பழக்கண்காட்சி உள்ளிட்ட கோடை விழா நிகழ்ச்சிகள் மே மாதத்தில் நடத்தப்படுகின்றன. இதுதவிர, தனியார் சார்பில் நாய் கண்காட்சி உள்ளிட்டவைகளும் நடத்தப்படுகின்றன.

ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் தங்கி செல்ல வசதியாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நட்சத்திர ஓட்டல்கள், லாட்ஜ்கள், காட்டேஜ்கள் உள்ளிட்டவை ஏராளமாக உள்ளன. இதுமட்டுமின்றி சாலையோர வியாபாரிகள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமானோருக்கு சுற்றுலா தொழிலே முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இதனால், நீலகிரியின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் தொழில்களில் ஒன்றாக சுற்றுலா தொழில் உள்ளது என்றால் மிகையில்லை. இந்நிலையில், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்திற்குள் கோடை சீசனில் மட்டும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊட்டிக்கு தினமும் வேன்கள் உட்பட 20 ஆயிரம் வாகனங்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி., பெங்களூரு ஐஐஎம்., ஆகியவை ஆய்வு செய்ய உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, கடந்த ஆண்டு மே 7ம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறையில் உள்ளது. நடப்பு ஆண்டு கோடை சீசனின் போது வார நாட்களில் நீலகிரிக்கு 6 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களும் மட்டுமே நீலகிரிக்குள் அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இ-பாஸ் கட்டுப்பாடு காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. முன்பெல்லாம் 3 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியை 1.50 லட்சம் முதல் 2 லட்சம் சுற்றுலாபயணிகள் பார்வையிடுவார்கள். இ-பாஸ் மற்றும் வாகன கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நடப்பு ஆண்டு மலர் கண்காட்சி 10 நாட்கள் நடத்தப்படுகிறது. இதில் கடந்த 7 நாட்களில் 1.20 லட்சம் சுற்றுலா பயணிகளே பார்வையிட்டுள்ளனர். இம்முறையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இதனிடையே, இ-பாஸ் நடைமுறையால் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போதிய அளவு சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் வார நாட்களிலும் காட்டேஜ்களில் அறைகள் முழுமையாக நிரம்புவதில்லை. இதனால் ஊட்டி நகரில் உள்ள காட்டேஜ்கள் மீண்டும் வாடகை வீடுகளாக மாறி வருகின்றன. இதுதவிர சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள், வாடகை வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலரும் பாதிப்படைந்துள்ளனர்.

இதுகுறித்து ஊட்டியில் சுற்றுலா தொழில் செய்து வரும் பென்னி கூறியதாவது:
இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக குறைந்துள்ளது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தொழில் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் வர கூடிய சுற்றுலா பயணிகளும் தங்கள் சொந்த வாகனங்களிலேயே வந்து செல்கின்றனர். இதனால், வாடகை வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு சரியான வருவாய் இல்லை.

முன்பெல்லாம் கோடை சீசன் என்றால் இரு மாதங்கள் ஊட்டியில் காட்டேஜ்கள், ஓட்டல்களில் முன்பதிவு செய்யாமல் அறைகள் கிடைக்காது. காட்டேஜ்கள் நடத்துவோர் ஆண்டு முழுவதும் கிடைக்கும் வருவாயை ஏப்ரல், மே மாதங்களிலேயே ஈட்டி விடுவார்கள். தற்போதைய கட்டுப்பாடுகள் காரணமாக வார இறுதி நாட்களில் கூட காட்டேஜ் நிரம்பவில்லை. இதனால் காட்டேஜ்களை பலரும் வாடகை வீடுகளாக மாற்றி வாடகைக்கு விட துவங்கியுள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் வரும் ஆண்டுகளில் நீலகிரியில் சுற்றுலா தொழில் காணாமல் போய்விடும். வேறு தொழில் வாய்ப்புகளே இல்லாத நிலையில், வாழ்வாதாரத்திற்காக என்ன செய்வதே என்றே தெரியவில்லை, என்றார்.

The post நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு; போதிய வருவாய் இல்லாததால் வாடகை வீடுகளாக மாறும் காட்டேஜ்கள் appeared first on Dinakaran.

Read Entire Article