சென்னை: நீர்வளத்துறை சார்பில் 8 மாவட்டங்களில் ரூ.83.19 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட 19 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கிடைக்கப்பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், புதிய நீராதாரங்களை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு, நீர்வளத்துறை மூலமாக பல்வேறு பாசன மேம்பாட்டுத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், கவுண்டையன்வலசு கிராமம் அருகில் அமராவதி ஆற்றின் குறுக்கே 11 கோடியே 12லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை; திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மாம்பாடி-புங்கந்துறை கிராமம் அமராவதி ஆற்றில் 11 கோடியே 56லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை; காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், கொளப்பாக்கம் கிராமத்தில், கொளப்பாக்கம் கால்வாய் 1 முதல் கொளப்பாக்கம் – பொழிச்சலூர் சாலையில் இணைப்பு ஓடை வரை 11 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூடிய வடிவிலான கால்வாய்; காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், உள்ளாவூர் கிராமத்தின் அருகே தொள்ளாழி மடுவின் குறுக்கே 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு;
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், இருமரம் கிராமத்தின் அருகே புத்தளிமடுவின் குறுக்கே 3 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை; திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தில் 4 கோடியே 71 இலட்சம் ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்ட அய்யம்பாளையம் ராஜவாய்க்கால்; திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், குளத்தூர் கிராமம், சந்தானவர்த்தினி ஆற்றின் குறுக்கே 3 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை; திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், தாசாரிபட்டி கிராமம், முத்துபூபால சமுத்திரம் கண்மாய்க்கு நீர் வழங்க பாலாத்து ஓடையின் குறுக்கே 3 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டு;
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வட்டம், பொன்னிமான்துறை உட்கடை சிந்தலக்குண்டு கிராமத்தில் குடகனாற்றின் குறுக்கே 3 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை;
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், அரசப்பிள்ளைபட்டி கிராமம், நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே 2 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை; திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், நிலக்கோட்டை கிராமம், கொங்கர்குளம் மற்றும் நூத்துலாபுரம் கிராமம், பாப்பன்குளம் கண்மாய்களுக்கு செங்கட்டான்குளம் கண்மாய் உபரிநீர் வழங்கும் பகிர்மான அணையினை 1 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற மறுகட்டுமானப் பணி மற்றும் வெள்ளத்தடுப்புச் சுவர்;
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், கஸ்தூரிரெங்கபுரம் கிராமம் பகுதி 2-இல் 4 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய குளம்; திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் வெள்ளநீர் சூழ்வதை தடுக்கும் வகையில் திருப்பணிகரிசல்குளம் வெள்ள நீரை 3 கோடியே 79 லட்சம் செலவில் முடிவுற்ற நெடுங்குளம், மேகமுடையார் குளம் வழியாக சத்திரம் புதுக்குளம் கண்மாய்க்கு திருப்பும் பணி; பெரம்பலூர் மாவட்டம் மற்றும் வட்டம், விளாமுத்தூர் கிராமத்தில், மருதையாற்றின் குறுக்கே 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை;
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், வடக்கிபாளையம் கிராமத்தில் கோதவாடி ஓடையின் குறுக்கே 2 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை; தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், வடக்கு கல்மேடு கண்மாயில் 1 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணி; தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டம், பேரூரணி அணைக்கட்டில் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணி; தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம், சம்பன்குளம் ஏரியின் வழங்கு வாய்க்காலின் இடது கரையில் 50 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புப் பணிகள்;
திருச்சி மாவட்டத்தில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு கோட்ட தலைமையிட உபகோட்டத்துடன் புதிய அலுவலகக் கட்டடம்; என மொத்தம் 83 கோடியே 19 இலட்சம் ரூபாய் செலவில் நீர்வளத்துறை சார்பில் நிறைவேற்றப்பட்ட 19 திட்டப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. மணிவாசன், நீர்வளத்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் சா. மன்மதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post நீர்வளத்துறை சார்பில் 8 மாவட்டங்களில் ரூ.83.19 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட 19 திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.