நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு

2 months ago 14

சென்னை,

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக கடந்த 2004ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டும் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், திருவேற்காடு கோலடி ஏரியை ஆக்கிரமித்து குடியிருப்பு கட்டியது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்தார். மேலும், அந்த பகுதியில் 20வருடங்களுக்கு மேல் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.

அப்போது குறுகிட்ட நீதிபதிகள், 20 ஆண்டுகள் இல்லை சோழர் காலத்தில் இருந்தே ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டுமென நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், 162 ஏக்கரில் இருந்த ஏரி தற்போது 112ஆக சுருங்கிவிட்டது என்றனர். இதையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் நபர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ம.கவுதமன் உரிய பட்டாவோடு மக்கள் வீடுகளை கட்டி வாழ்ந்துவருவதாகவும் அவர்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது நீதிபதிகள், கடும் மழை காலத்தில் அந்த பகுதி மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டே தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துள்ளோம், இந்த வழக்கில் அவர்களையும் இணைக்க வேண்டும். இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரத்தை நியமிக்கிறோம் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Read Entire Article