நீர் சுழற்சி-நீர் மேலாண்மை குறைபாடு: வலசை வரும் பறவைகள் எண்ணிக்கை குறைவு

2 days ago 3

திருப்பூர், ஏப்.17: நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் நீர் சுழற்சி-நீர் மேலாண்மை குறைபாடு காரணமாக வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. 1489ம் ஆண்டில் இருந்து 1527 வரை ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட பகுதிகளான அந்தியூர், குன்னத்தூர், கொழிஞ்சிவாடி, சர்க்கார் பெரியபாளையம், நசியனூர், மறவம்பாளையம், வெள்ளோடு உள்ளிட்ட பகுதிகளை ஆட்சி செய்து வந்த சிற்றரசர் நஞ்சராய நாயக்கர்‌ ஆட்சி காலத்தில் திருப்பூர் மாவட்டம் சர்க்கார் பெரியபாளையத்தில் நல்லாற்றின் குறுக்கே பாசன பயன்பாட்டிற்காக 440 ஏக்கர் பரப்பளவில் குளம் ஒன்றை வெட்டினார். பாசன பயன்பாட்டில் இருந்த இந்த குளம் 500 ஆண்டுகளைக் கடந்து நீர் தேக்கமாக மாறியது. நல்லாற்றில் இருந்து வரும் தண்ணீர் இந்த குளத்தின் பெரும் பகுதியில் தேங்கி சதுப்பு நிலமாக உருவாக்கியது‌ பெரும் புதராகவும், நல்ல உயிர்ச்சூழல் மிக்க பகுதியாகவும் இயற்கையாகவே மாறிய இந்த குளத்தை தேடி ஆண்டுதோறும் உள்நாட்டு பறவைகள் மட்டுமல்லாது, பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பறவைகளும் வலசை வந்து சென்றனர்.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை வலசை காலமாக எடுத்துக்கொண்டு உள்நாட்டு பறவைகளான கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை, பழுப்பு நாரை, செந்நீல நாரை, பெரிய கொக்கு, நடுத்தர கொக்கு, சிறிய கொக்கு, உண்ணி கொக்கு, மடையான், இராக்கொக்கு, சிறிய நீர்காகம், நடுத்தர நீர்காகம், பளபளக்கும் அருவாள் மூக்கன், நீல தாழைக்கோழி, தென் சிட்டு, நெடுங்கால உள்ளான், கானாங்கோழி, புள்ளிமூக்குவாத்து உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பறவைகளும், ரஷ்யா, சைபீரியா, மங்கோலியா, வடமேற்கு ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பட்டை தலை வாத்து, தட்டைவாயன், நீலச்சிறகி, கிலுவை, பட்டாணி உப்பு கொத்தி, ஸ்பூன் பில், கிரீன் ஹெரான், கிரேவாக் டெய்லர், சேன்ட் பையன், கூழைகடா உள்ளிட்ட எண்ணற்ற பறவைகளும் வலசை வருகின்றன. உலகிலேயே அதிக உயரத்தில் பறக்கும் பட்டை தலை வாத்துக்கள், ஐரோப்பா கண்டத்தை தாயகமாக கொண்ட வளைமூக்கு உள்ளான் உள்ளிட்ட 187 வகை பறவைகள் வந்து செல்கின்றன.

சுமார் 440 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் தேங்கி மணல் திட்டங்கள் அமைக்கப்பட்டு சில பகுதிகள் புதர்களாகவும் இருப்பதன் காரணமாக பறவைகள் வலசை வருவதற்கு காரணமாக இருந்தது. இயற்கையாகவே பறவைகள் வலசை வருவதற்கு உகந்த இடமாக அமைந்ததன் காரணமாக கடந்த 2015ம் ஆண்டு இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் என சுமார் 25 ஆயிரம் பறவைகள் வலசை வந்து சென்றது. அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை பறவைகளின் வலசை காலமாக இருக்கக்கூடிய நிலையில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வலசை வரும் பறவைகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். இதன் காரணமாக தமிழக அரசு கடந்த 2022ம் ஆண்டு நஞ்சராயன் குளத்தை 17வது பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. தமிழகத்தின் 17வது பறவைகள் சரணாலயமாக நஞ்சராயன் குளம் அறிவிக்கப்பட்டது. இது மட்டுமல்லாது ஒன்றிய அரசின் ராம்சார் தளமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வலசை வரும் பறவைகள் எண்ணிக்கை குறைந்து வருவதாக இயற்கை அலுவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து திருப்பூர் இயற்கை ஆர்வலர் ரவீந்திரன் கூறுகையில், ‘இயற்கையாகவே நஞ்சராயன் குளத்தில் பறவைகள் வலசை வருவதற்கான வசதிகள் அமைந்ததன் காரணமாக ஆண்டுதோறும் இங்கு பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் காரணமாக பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசும் பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. ஆனால் அதற்குப் பின் நீர் சுழற்சி மற்றும் நீர் மேலாண்மை குறைபாடு காரணமாக வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை சுமார் 80 சதவீதத்திற்கும் கீழ் குறைந்தது. கடந்த ஆண்டுகளில் கணக்கெடுப்பின்படி 2000க்கும் குறைவான பறவைகள் மட்டுமே வலசை வந்து சென்றுள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பிறகு இங்கு குளத்தில் நீர் தேக்கம் செய்யப்படுகிறது. இதனால் மணல் திட்டுக்கள் மற்றும் சமவெளி பரப்புகள் குறைவதால் பறவைகள் வந்து ஓய்வு எடுப்பதற்கான வசதிகள் இல்லாமல் போனது.

மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு அவ்வப்போது தண்ணீர் குறையும் பட்சத்தில் மணல் திட்டுக்கள் மற்றும் சமவெளி பரப்புகள் அதிகரிக்கும். அதன் மூலம் வலசை வரும் பறவைகள் சமவெளி பரப்புகளில் அமர்ந்து ஓய்வெடுக்கவும், இரைத்தேடவும் வசதியாக இருக்கும். சமவெளி பரப்புகள் இல்லாததன் காரணமாக ஒரு சில பறவை இனங்கள் வருகை முற்றிலுமாக குறைந்தது. இதனை வனத்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பறவைகளுக்கு ஏற்ற சிதோஷ்ன நிலையை உருவாக்கும் பட்சத்தில் மீண்டும் நஞ்சராயன் குளத்திற்கு பழையபடி பறவைகள் வருகை அதிகரிக்கும். அதேபோல் பறவைகள் வலசை வரும் காலத்தில் குளம் முழுவதும் படர்ந்து உள்ள ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், ஆகாயத்தாமரைகள் படர்ந்துள்ளதால் வலசை வரும் பறவைகள் இரை தேடுவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

The post நீர் சுழற்சி-நீர் மேலாண்மை குறைபாடு: வலசை வரும் பறவைகள் எண்ணிக்கை குறைவு appeared first on Dinakaran.

Read Entire Article