பெரம்பூர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, சூளை பகுதியில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக எழும்பூர் வடக்கு பகுதி சார்பில், ‘’மக்கள் முதல்வரின் மனிதநேய விழா 2025 – “இறையாண்மை காக்கும் தமிழாண்மை! இவரால் அடைந்தது நம் மேன்மை!!” என்ற தலைப்பில் திமுக வழக்கறிஞரணி இணை செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் தலைமையில் புகழரங்கம் நேற்று மாலை நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது;
நூறாண்டுக்கு முன்பாகவே என்னுடைய தாத்தா பி.டி.ராஜன் இந்தி திணிப்புக்கு எதிரானவர்கள். இந்திக்கு எதிரானவர்கள் இல்லை என கூறினார். 100 ஆண்டுகள் கடந்து இன்னும் அதையே நாம் கூறிக்கொண்டிருக்கிறோம். அவர்களும் மீண்டும், மீண்டும் அதேயே செய்து கொண்டிருக்கின்றனர். ஆளுநர் என்பவர்கள் அரசியல் காரணத்துக்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டு, தொந்தரவு செய்வதற்காகவே அனுப்பப்படுகிறார்கள். சட்டமன்றத்தில் செயல்பாட்டை ஏதாவது விதத்தில் குறைக்க சுயாட்சியை தடுக்கவே கவர்னர் அனுப்பப்படுகிறார்கள். இந்த விதிமுறை ரொம்ப தவறானது.
நீதிக்கட்சி துவங்கியதில் இருந்து இன்று வரைக்கும் 104 ஆண்டுகளாக இன்னும் இந்த ஆதிக்கம், யாரெல்லாம் டில்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்துகிறார்களோ, மன்னராட்சி நடத்துகிறார்கள் என நினைக்கிறார்கள். நிரந்தர பிரச்னையாக இருந்ததை மிகச்சிறந்த தீர்வை உச்சநீதிமன்றத்தில் பெற்று, இதுவரை இல்லாத தெளிவும் கோட்பாடும் உருவாக்கும் வகையில், ஒரு தீர்ப்பை பெற்று இனிமேல் அனைத்து மாநிலங்களுக்கும் இருக்கும் உரிமையை பெற்றுதந்த நமது முதலமைச்சர், எந்த அளவுக்கு 100 ஆண்டு கால பிரச்னையை தீர்த்து வைத்திருக்கிறார். மசோதாவை பூட்டி வைத்துவிட்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. சட்டமைப்புக்கு எதிரானது என்று தீர்ப்பு வந்திருக்கிறது. நலம் பெறுவது தமிழ்நாடு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களும் பயனடையும். அந்த அடிப்படையில் இந்திய நாடே நலம் பெறுகிறது. இந்தியாவில் இருந்து ஒவ்வொரு குடிமகனும் இந்த தீர்ப்பினால் நமது முதலமைச்சரின் செயலினால் பயனடைகிறோம் என்று கூறினர். இவ்வாறு பேசினார்.
நடிகர் யோகிபாபு பேசும்போது, ‘’முதலமைச்சருக்கு பெரிய, பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் வாழ்த்து சொல்லலாம். ஆனால் ஒரு சாதாரண காமெடி நடிகரான என்னை, நீ வந்து மனமாற வாழ்த்துப்பா என்று அழைத்த அமைச்சர் சேகர்பாபுவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்’ என்றார். இதில், திரைப்பட கலைஞர்கள் தியாகராஜன், அறந்தாங்கி நிஷா ஆகியோரும் சிறப்புரையாற்றினர். இந்த பொதுக்கூட்டத்தில், மேயர் பிரியா, மண்டல குழு தலைவர் சரிதா, மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி தர், தமிழன் பிரசன்னா, பகுதி செயலாளர்கள் வேலு, சுதாகர், பருதி இளம் சுருதி, நாதன், புனிதவதி எத்திராசன், எல் சுந்தர்ராஜன், பாலு, மனோகர் கலந்துகொண்டனர்.
The post நீதிமன்ற தீர்ப்பின் மூலம் 100 ஆண்டுகளாக இருந்த பிரச்னைகளுக்கு தீர்வுகண்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு appeared first on Dinakaran.