*மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை
நாமக்கல் : நாமக்கல் மாநகரில், பொது இடங்களில் சாலையோரங்களில் இருந்த 70 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, மாநகராட்சி அலுவலர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் சாலையோரங்களிலும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் அரசியல் கட்சியினர் மற்றும் பொது அமைப்பினர் வைத்துள்ள கொடிக்கம்பங்களை அகற்றும்படி, உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த மாதம் உத்தரவிட்டது.
இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், சாலையோரம் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றும்படி, மாவட்ட கலெக்டர் உமா நடவடிக்கை எடுத்துள்ளார். இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையினர், உள்ளாட்சி அமைப்பினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாநகராட்சி எல்லையில் உள்ள பல்வேறு சாலைகளில், மொத்தம் 89 கொடிக்கம்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அரசியல் கட்சியினர் மற்றும் பொது அமைப்பின் பொறுப்பாளர்களுக்கு கடிதம் அனுப்பினார்.
இதனை ஏற்று மாநகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 19 கொடிக்கம்பங்களை வைத்தவர்களே அகற்றி விட்டனர். இதைத்தொடர்ந்து மீதமுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதையடுத்து மாநகராட்சி செயற்பொறியாளர்(திட்டங்கள்) கலைவாணி, துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கர், ஜான், ஆகியோர் தலைமையிலான பணியாளர்கள், கடந்த இரண்டு நாட்களாக நாமக்கல் மாநகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் பொது அமைப்பினரின் கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் 28 கொடிக்கம்பங்களும், நேற்று 21 கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டது. மாநகராட்சி பணியாளர்க, நேற்று நாமக்கல் -மோகனூர் ரோடு, திருச்சி ரோடு, திருச்செங்கோடு ரோடு போன்ற சாலைகளில் இருந்து கொடிக்கம்பங்களை பொக்லைன் கொண்டு அப்புறப்படுத்தி, மாநகராட்சி வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அப்போது, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கடைகளின் விளம்பர பலகைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘நீதிமன்றத்தின் உத்தரவின்படியும், மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரிலும், மாநகரில் சாலைகளில் இருந்த கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. மாநகரில் அனைத்து இடங்களிலும் இருந்த கொடிக்கம்பங்கள் மற்றும் பீடங்கள் கடந்த இரண்டு நாட்களாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 70 கொடிக்கம்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இடங்களில் மீண்டும் யாரும் கொடிக்கம்பங்களை வைக்க வேண்டாம்,’ என்றனர். இதேபோல், மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் உள்ள கொடிக்கம்பங்களையும் கடந்த இரண்டு நாட்களாக ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
The post நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மாநகரில் பொது இடங்களில் 70 கொடிக்கம்பங்கள் அகற்றம் appeared first on Dinakaran.