
வாஷிங்டன்,
ஹாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் கிறிஸ்டென் ஸ்டீவர்ட். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்த இவர், 1999-ம் ஆண்டு தனது 8-வது வயதில் 'தி தர்டீன்த் இயர்' என்ற படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்த கிறிஸ்டென் ஸ்டீவர்ட், 'ட்வைலட்'(Twilight) திரைப்படத்தில் பிரபல நடிகர் ராபர்ட் பாட்டின்சனுடன் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமடைந்தார். கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'ஸ்பென்சர்'(Spencer) திரைப்படத்தில் மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் கதாபாத்திரத்தில் கிறிஸ்டென் ஸ்டீவர்ட் நடித்திருந்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு கிறிஸ்டென் ஸ்டீவர்ட் தன்னை ஒரு தன்பாலின ஈர்ப்பாளராக அறிவித்துக் கொண்டார். அதோடு பிரபல ஹாலிவுட் திரைக்கதை எழுத்தாளர் நிக்கோலஸ் மேயரின் மகளும், தனது நீண்ட நாள் தோழியுமான டைலான் மேயர் என்ற பெண்ணை காதலிப்பதாக கிறிஸ்டென் ஸ்டீவர்ட் அறிவித்தார். இவர்கள் இருவருக்கும் 2021-ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிலையில், கிறிஸ்டென் ஸ்டீவர்ட்-டைலான் மேயர் ஜோடிக்கு தற்போது எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இல்லத்தில் நடந்த இந்த திருமணத்தில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நடிகை கிறிஸ்டெனுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.