நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்; நெல்லை- தென்காசி இடையே ரயில்நிலைய நடைமேடைகளை நீட்டிக்க டெண்டர்: ஓராண்டிற்குள் முடிக்க திட்டம்

1 day ago 4


நெல்லை: நெல்லை – தென்காசி இடையே உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கு தென்காசி மாவட்ட ரயில் பணிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. நூற்றாண்டு பெருமை மிக்க வழித்தடமான நெல்லை- செங்கோட்டை வழித்தடத்தில் எப்போதுமே பசுமைக்கு பஞ்சமிருக்காது. இவ்வழித்தடத்தில் மீட்டர் கேஜ் சென்ற ரயில்கள் இன்னமும் இயக்கப்படவில்லை. கேரளாவிற்கு செல்லும் மிக முக்கிய வழித்தடமான நெல்லை – செங்கோட்டை ரயில் வழித்தடத்தில் நெல்லை, தென்காசி, செங்கோட்டை தவிர மற்ற ரயில் நிலையங்களில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடை வசதிகள் இல்லை. நடைமேடை நீளம் இல்லாத காரணத்தினால் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

இதனால் செங்கோட்டையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் செங்கோட்டை – தாம்பரம் வாரம் மும்முறை ரயில், நெல்லை – மேட்டுப்பாளையம், நெல்லை – தாம்பரம் ஆகிய வாராந்திர சிறப்பு ரயில்களிலும் 24 பெட்டிகள் இணைக்க முடியாத நிலை உள்ளது. சில மாதங்களுக்கு முன் மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் நெல்லை – தென்காசி இடையே சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு 550 மீட்டர் நீளத்துக்கு அதிகரிக்க முன்மொழிவு செய்யப்பட்டது. இந்த நடைமேடைகளை நீட்டிப்பதற்கான சாத்திய கூறுகள் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவை தயார் செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது நடைமேடைகளை நீட்டிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

சேரன்மகாதேவி, கீழக்கடையம், பாவூர்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் இரு நடைமேடைகளும், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் மற்றும் திருமங்கலம் இரயில் நிலையங்களில் முதலாம் நடைமேடை நீட்டிப்பு செய்ய 11.65 கோடி மதிப்பீட்டில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க டெண்டர் விடப்பட்டு உள்ளது. அனைத்து பணிகளையும் 12 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா கூறுகையில், ‘‘நெல்லை தென்காசி ரயில் வழித்தடத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தொடர் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த மூத்த கோட்ட பொறியாளர் பிரவீனா மற்றும் பொறியாளர் குழுவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

12 மாதம் எடுத்துக் கொள்ளாமல் 6 மாதத்திலேயே நடைமேடை நீட்டிப்பு பணிகளை முடிக்க வேண்டுகிறோம். நடைமேடை நீட்டிக்கப்படும் பட்சத்தில் செங்கோட்டை – தாம்பரம் வாரம் மும்முறை ரயிலில் கூடுதலாக 5 தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்க முடியும். இதனால் 400 பயணிகள் கூடுதலாக பயணிக்க முடியும். இதனால் தெற்கு ரயில்வேக்கு ஒவ்வொரு ட்ரிப்புக்கும் கூடுதலாக 2 லட்சம் வருமானம் கிடைக்கும். மேலும் பண்டிகை காலங்களில் 24 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில்களை இயக்க வசதியாக இருக்கும். நடைமேடை நீட்டிப்புக்கு தொடர்ந்து கோரிக்கைகள் மூலம் வலியுறுத்திய எம்பி, எம்எல்ஏக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ’’ என்றார். நெல்லை- செங்கோட்டை மார்க்கத்தில் நடைமேடைகள் நீட்டிப்பு மூலம் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வாய்ப்புகள் உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்
இதுகுறித்து ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த கடையம் அந்தோணி கூறுகையில், ‘‘நெல்லை- செங்கோட்டை மார்க்கத்தில் பண்டிகை காலங்களில் 24 பெட்டிகளை கொண்ட சிறப்பு ரயில்களை இயக்குவதில் சிரமங்கள் இருந்தன. அடுத்த ஓராண்டுக்குள் நடைமேடைகள் நீட்டிப்பு செய்யப்படும்போது, கூடுதல் சிறப்பு ரயில்களை இம்மார்க்கத்தில் இயக்க இயலும். இனி வரும் காலங்களில் செங்கோட்டை- தாம்பரம் வாரம் மும்முறை ரயிலிலும் கூடுதல் பெட்டிகளை இணைக்க முடியும். செங்கோட்டை-புனலூர் இடையே புது ஆரியங்காவு, தென்மலை, எடமன் ஆகிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 18 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கும், அவனீஸ்வரம், கொட்டாரக்கரா, சந்தனதோப்பு ஆகிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிப்பு செய்திட கடந்த மார்ச் மாதம் டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்க உள்ளன. அத்தோடு நெல்லை- செங்கோட்டை மார்க்க பணிகளும் விரைவுப்படுத்தப்பட்டால், அடுத்த ஆண்டே நெல்லையில் இருந்து கொல்லம் வரை கூடுதல் பெட்டிகளுடன் ரயில்களை இயக்க முடியும்.’’ என்றார்.

The post நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்; நெல்லை- தென்காசி இடையே ரயில்நிலைய நடைமேடைகளை நீட்டிக்க டெண்டர்: ஓராண்டிற்குள் முடிக்க திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article