சென்னை: “ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய எந்த முயற்சியும் எடுக்காததால் திமுக மீது மக்களுக்கு எழுந்துள்ள கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் சரிசெய்வதற்காக, முதல்வர் ஸ்டாலின் நாளை (ஏப்.9) அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தால் எவ்விதத் தீர்வும் ஏற்படப் போவதில்லை. இது ஒரு நாடகம். எனவே, திமுக அரசு அழைத்துள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது,” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் - திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தபோது, குலாம்நபி ஆசாத் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவும், திமுக-வின் காந்திசெல்வன் மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்த போது, 21.12.2010-ல் நீட் தேர்வு குறித்து மத்திய அரசிதழில் அறிவிக்கை செய்தது. 2011 முதல் 2016 வரை தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி தமிழகத்திற்கு நீட் தேர்விற்கு தற்காலிகமாக விலக்கு பெற்றார்கள். உச்சநீதிமன்றம் 9.5.2016-ஆம் தேதியிட்ட தீர்ப்பில், நீட் தேர்வின் மூலம்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று கூறியது.