வேலூர், மே 6: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மையத்தில் நீட் தேர்வு ஆவணத்தில் கண்காணிப்பாளர், மாணவரின் கையெழுத்து வாங்க மறந்து மாணவரை தேடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 31 நகரங்களில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, கல்லூரிகளே தேர்வு மையங்களாக அமைக்கப்பட்டிருந்தன. வேலூர் மாவட்டத்தில் 12 மையங்களில் நீட் தேர்வு நடந்தது. வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மையத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளை சோதனையிட்டபோது, மறைவுக்காக போடப்பட்ட திரை டிரான்ஸ்பரன்டாக தெரியும்படி இருந்ததாம். அதுமட்டுமின்றி சோதனை நடத்திய பெண்களும் அருவறுக்கத்தக்க வகையில் இரட்டை அர்த்தத்தில் மாணவிகளிடம் கேள்விகளை எழுப்பியதாக தற்போது புகார் எழுந்துள்ளது.
அதேபோல் இம்மையத்தில் ஒரு அறையில் தேர்வு எழுத வந்த மாணவர்களின் ஹால் டிக்கெட் உள்ளே வரும்போது கையெழுத்து வாங்கப்பட்டது. இதுதவிர அறைக்குள் அனுமதிக்கும் கடிதம் உட்பட பல படிவங்களில் மாணவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இதில் தேர்வு முடிந்ததும் மாணவர்களிடம் தேர்வு ஆவணத்தில் கையெழுத்துடன், இடது கை பெருவிரல் ரேகை பதிவும் பெறப்பட்டது. இவ்வாறு ஒரு அறையில் 2 மாணவர்களிடம் இந்த கையெழுத்தும், இடது கை பெருவிரல் ரேகை பதிவும் பெறாமல் விடுப்பட்டுள்ளது.
தேர்வு மைய பொறுப்பாளர்களுக்கு தெரிய வந்ததும், உடனே சம்பந்தப்பட்ட அறை கண்காணிப்பாளர்களை அழைத்து டோஸ் விட்டார்களாம். அப்போதுதான் அறை கண்காணிப்பாளர்களுக்கே நடந்த தவறு தெரிய வந்துள்ளது. அதன் பிறகு பதறிய தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களை தேடி சென்று கையெழுத்து பெற்று சென்றார்களாம். இத்தகைய அலட்சியம் எப்படி நேர்ந்தது என சமூக ஆர்வலர்களின் கேள்வி எழுப்பியுள்ளனர். அதோடு அலட்சியமாக இருந்த அறை கண்காணிப்பாளர் மற்றும் மாணவிகளிடம் சோதனை என்ற பெயரில் அத்துமீறி நடந்த பெண் அலுவலர்கள் குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.
The post ‘நீட்’ தேர்வு ஆவணத்தில் கையெழுத்து வாங்க மறந்து மாணவரை தேடிய கண்காணிப்பாளர்கள் மாணவிகளின் முகம் சுளிக்க வைத்த சோதனை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மையத்தில் appeared first on Dinakaran.