சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு நிச்சயம் விலக்கு பெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொளத்தூர் கிழக்கு பகுதி சார்பில் 75 ஆவது நாளாக ரமணா நகர் மற்றும் பெரியார் நகர் அரசு மருத்துவமனை வெளியே உள்ள கார்த்திகேயன் சாலையில் நடைபெற்ற அன்னம் தரும் அமுத கரங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் தறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் காலை உணவு வழங்கினார்கள்.
தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி மகிழ்ந்தார்கள். இறுதியாக அமைச்சர்கள் முதல்வர் படைப்பவத்தை பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; நீட் நுழைவுத் தேர்வு வந்த நாள் முதல் இதில் மோசடிகளும், குளறுபடிகளும் நடந்து வருகிறது. இந்த தேர்வை உச்சநீதிமன்றம் கண்டித்த பிறகும் கூட மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் வகையில் ஒரு கொடுமையான தேர்வாக இருந்து வருகிறது. நேற்று நடத்த தேர்வின் போது, தாலியை கழட்டி வைத்து விட்டு நீட் தேர்வு எழுத வேண்டும் என்று மாணவியிடம் வலியுறுத்தியது எல்லாம் வரலாறு காணாத அத்துமிரலாகும்.
இப்படி நீட் தேர்வால் மாணவர்கள் பல அழுத்தங்களை சந்திக்க நேரிடுகிறது. ஒன்றிய அரசு கொண்டு வந்த இந்த நீட் தேர்வால் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு, முட்டுக்கட்டைப் போடுகிறது ஒன்றிய பாஜக அரசு. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழிசை சௌந்தரராஜன், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அரசுக்கு உதவ வேண்டும். ஆனால் அதனை செய்யாமல், தேவையின்றி வீண் கருத்துக்களை கூறுவது அவர்களின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டை 10% வரை உயர்த்துவது குறித்து சட்ட வல்லுனர்களின் ஆலோசனை அவசியமானது. சட்ட வல்லுநர்களின் ஆலோசனையின் அடிப்படையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று கூறினார்.
The post நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு நிச்சயம் விலக்கு பெறும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி appeared first on Dinakaran.