
சென்னை,
'இறுதிச்சுற்று', 'சூரரைப் போற்று' படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகைத் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் சுதா கொங்கரா. இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி படத்தை இயக்குகிறார். மேலும், ரவி மோகன், ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படமானது கடந்த 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த 29-ம் தேதியுடன் இறுதிச்சுற்று வெளியாகி 9 வருடம் ஆனநிலையில், இயக்குனர் சுதா கொங்கரா நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் அந்த பதிவில், "ஜனவரி 29 2016 அன்று வெளியான என்னுடைய சிறந்த படமான 'இறுதிச் சுற்று'-ஐ அனைவரும் ஏற்றுகொண்டீர்கள். இறுதிச் சுற்றும், நீங்களும்தான் என் வாழ்க்கையை மாற்றியது.நீங்கள் இல்லை என்றால் அது சுதாவின் இறுதிச் சுற்றாகவே இருந்திருக்கும்.
'பராசக்தி' படத்தின் அறிவிப்பிற்கு நீங்கள் கொடுத்த அன்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. அதற்கு படக்குழு சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்திற்கு எனது சிறந்ததை விட குறைவாக கொடுத்துவிட கூடாது என உறுதியாக இருக்கிறேன்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.