![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38102774-harvirat.webp)
மும்பை,
இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.
இதில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏனெனில் அவ்விரு அணிகள் மோதும் போட்டிகள் எப்போதும் விறுவிறுப்பாக இருக்கும். குறிப்பாக 2022 டி20 உலகக்கோப்பையில் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 160 ரன்களை துரத்திய இந்தியா 31/4 என ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இந்தியாவை வெற்றி பெற வைத்தனர்.
இருவரும் இணைந்து 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு வெற்றியை பெற்று தந்தனர். அந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா நங்கூரமாக விளையாடி 40 ரன்கள் அடித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய விராட் கோலி 82 ரன்கள் குவித்து அற்புதமாக போட்டியை பினிஷிங் செய்து கொடுத்தார்.
இந்நிலையில் இந்த போட்டியில் 31/4 என இந்தியா தடுமாறியபோது 20 ஓவர்கள் வரை நீங்கள் நங்கூரமாக விளையாட வேண்டும் என்று விராட் கோலியிடம் கூறியதாக ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அந்த போட்டியில் முதலாவதாக நம்மால் இதை செய்ய முடியும் என்று நான் நினைத்தேன். அது ஏறுவதற்கு மிகவும் கடினமான மலையை போல தெரிந்தது. ஆனால் நிறைய போட்டிகளில் நாம் முயற்சியை விடும் வரை தோல்வி வரப்போவதில்லை எனவே இது எங்களை நாங்களே நம்பி களத்தில் இருந்து ஒவ்வொரு பந்தையும் படியாக நினைத்து ஏறுவதை பொறுத்ததாகும்.
என்னைப் பொறுத்த வரை அப்போட்டியில் விராட் கோலி முடிந்தளவுக்கு நீண்ட நேரம் விளையாட வேண்டும் என்பதே இலக்காகும். அதனால் களத்திற்கு சென்றதும் 20 ஓவர் வரை நீங்கள் விளையாட வேண்டும் என்று அவரிடம் சொன்னேன். நவாஸ் பவுலிங் செய்ய வந்தபோது என்னுடைய இடத்தில் வீசினால் அவரை நான் அடிக்கப் போகிறேன் என்று விராட் கோலியிடம் சொன்னேன். அந்த போட்டியில் பயமின்றி எங்களுக்கு வெற்றியைப் பெறும் வாய்ப்பு கிடைத்தது.
ஏனெனில் நாங்கள் பின் வாங்குவதற்கு எந்த இடமும் இல்லாமல் இருந்தது. அதனால் ரிஸ்க் எடுத்து விளையாடிய நாங்கள் அவரை அட்டாக் செய்ததும் எதிரணி பதற்றமடைந்ததை பார்க்க முடிந்தது. குறிப்பாக ஹரிஷ் ரவூப்-க்கு எதிராக விராட் கோலி அடித்த சிக்சர் உணர்வுபூர்வமானது. அது எதிரணியின் முதுகெலும்பை உடைத்தது போல் அமைந்தது. சண்டையில் நீங்கள் இருக்கும்போது நிறைய விஷயங்கள் உங்களை நோக்கி வரும். அந்த போட்டி எப்போதும் நினைவு கொள்ளப்படும்" என்று கூறினார்.