
புதுச்சேரி,
புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகரை சேர்ந்த 46 வயது பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். அவரது 2 பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். அவர் தனது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி 2-வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அதைத்தொடர்ந்து கடலூர் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த சுந்தர் (வயது 53) என்பவர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவர் தங்களை பிடித்து இருப்பதாகவும், திருமணம் செய்ய ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் 2 பேரும் செல்போனில் பேசி வந்தனர். தொடர்ந்து அவர்கள் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச தொடங்கியதாக தெரிகிறது. அப்போது அந்த பெண்ணை அவர் நிர்வாணமாக வர சொல்லி வற்புறுத்தினார். அந்த பெண்ணும் திருமணம் செய்ய போகிறோம் என்ற நம்பிக்கையில் நிர்வாணமாக தோன்றி பேசியுள்ளார்.
இந்தநிலையில் கடந்த 2024-ம் ஆண்டு சுந்தர் திருமண செலவுக்காக பணம் கேட்டார். அதை நம்பி அந்த பெண் ரூ.1 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர் திருமண ஏற்பாடுகளை செய்யவில்லையாம். மேலும் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருமணம் செய்துகொள்ள நெருக்கடி கொடுத்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் நிர்வாண வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சுந்தர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.