நிர்வாகம் மேற்கொண்ட தொடர் முயற்சி ஒரு தற்கொலை சம்பவம் கூட பதிவாகாத சென்னை ஐஐடி

3 weeks ago 4

சென்னை: சென்னை ஐஐடியில், மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட மனநல ஆலோசனைகள் உள்ளிட்ட தொடர் முயற்சிகள் காரணமாக இந்த ஆண்டில் எந்த தற்கொலை சம்பவமும் பதிவாகவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஐஐடியை பொருத்தவரை ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு வகையில் அந்த வளாகத்தில் பயிலும் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகவே இருந்து வந்தது. இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில் மாணவர்களுக்காக ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த தொடர் முயற்சிகள் காரணமாக நடப்பாண்டில் (2024) சென்னை ஐஐடியில் ஒரு தற்கொலை கூட பதிவாகவில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாக உள்ளது.

இதுகுறித்து சென்னை ஐஐடி டீன் (மாணவர்கள்) சத்தியநாரயணன் என் கும்மாடி கூறியதாவது: மாணவர்களை தொடர்ந்து கண்காணித்து அவர்களுக்கான மனநல ஆலோசனைகள் வழங்கியதன் மூலம் அவர்களின் உளவியல் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடிந்தது. பாடச்சுமை, குடும்ப பிரச்னை, கடந்த காலத்தின் தாக்கம் இப்படி பலதரப்பட்ட காரணங்களால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பாடச்சுமையை குறைப்பதற்காக பாடத்திட்டமும் குறைக்கப்படுகிறது. வெறும் படிப்பு மட்டுமன்றி விளையாட்டு, பொழுதுபோக்கு என இதர விஷயங்களில் மாணவர்களை ஈடுபட வைக்கிறோம்.

இதனால் அவர்கள் தங்கள் படிப்புச்சுமையை மறந்து வாழ்க்கைக்கு தேவையானவற்றில் அதிக கவனம் செலுத்த முடிகிறது. மேலும், மாணவர்கள் வெளியில் சொல்ல முடியாத பிரச்னைகள் இருந்தால் கூட அதனை ஐஐடி இயக்குநரிடமே நேரடியாக தெரிவிக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். அதற்கான அனைத்து அனுமதியும் அவர்களுக்கு உள்ளது. இதன் காரணமாகவே இந்த ஆண்டு (2024) எந்த தற்கொலை சம்பவமும் நடந்தேறவில்லை என்பது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post நிர்வாகம் மேற்கொண்ட தொடர் முயற்சி ஒரு தற்கொலை சம்பவம் கூட பதிவாகாத சென்னை ஐஐடி appeared first on Dinakaran.

Read Entire Article