புதுடெல்லி,
பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை 10.52 மணிக்கு நாடாளுமன்ற மக்களவைக்கு வந்தார். அவரை மத்திய மந்திரிகள், பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
தனது 8-வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய வந்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், வெள்ளை நிறத்தில் தங்க நிற பார்டர் அமைந்த பட்டுச் சேலையும், சிவப்பு நிற ரவிக்கையும் அணிந்து இருந்தார். அவர் கட்டியிருந்த பட்டுச்சேலை பீகார் மாநிலத்தின் மதுபானி கலை நயத்துடன் நெய்யப்பட்டு இருந்தது. மதுபானி கலை என்பது பழங்கால கலை வடிவம் ஆகும். இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்த கலை வடிவம் நூற்றாண்டுகளுக்கு முன்பே வீடுகள், கோவில்களை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுபானியில் உள்ள மிதிலா கலை நிறுவனத்துக்கு நிர்மலா சீதாராமன் சென்றபோது, மதுபானி கலைஞரானபத்மஸ்ரீ விருது பெற்ற துலாரி தேவி, அவருக்கு பரிசாக வழங்கியது. இதனை பட்ஜெட் தாக்கல் செய்யும்போது அணியுமாறு அவர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. மதுபானி கலை மற்றும் துலாரி தேவியின் தனித்துவமான திறமைக்கு மரியாதை செய்யும் விதமாகவும், துலாரியின் வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாகவும் இன்றைய பட்ஜெட் தாக்கலின்போது பரிசளிக்கப்பட்ட அந்தச் சேலையை அணிந்து வந்தார்.
துலாரி தேவிக்கும், அந்தக் கலைக்கும் மரியாதை செய்யும் விதமாக இன்று (சனிக்கிழமை) பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதிமந்திரி உடுத்தி வந்த சேலை வழக்கம் போல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு மேற்கு வங்காளத்தை சேர்ந்த கந்தா எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளுடன் கூடிய நீல நிற டஸ்ஸர் பட்டுச் சேலை நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின்போது உடுத்தியிருந்தார்.
இந்தியாவின் ஜவுளி பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமான சேலைகளை நிர்மலா சீதாராமன் அணிவது இது முதல் முறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.