நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம் - ஹர்பஜன் சிங்

2 weeks ago 5

புதுடெல்லி,

புனேயில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதன் மூலம் 12 ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. வழக்கமாக இந்திய ஆடுகளங்களில் கடைசி இரு நாளில் தான் பந்து சுழன்று திரும்பும். ஆனால் முழுக்க முழுக்க சுழலுக்கு உகந்த வகையில் தயார் செய்யப்பட்டிருந்த இந்த ஆடுகளத்தில் முதல் நாளில் இருந்தே பந்து சுழன்று திரும்பியது.

இதை இந்தியாவை காட்டிலும் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சளர்கள் சரியாக பயன்படுத்தி நமது அணியை நிலைகுலையச் செய்து விட்டனர். இந்நிலையில், இது குறித்து இந்திய முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தனது கருத்தை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, உள்நாட்டில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து நீண்டகாலம் தக்க வைத்திருக்கும் சாதனையை இழக்கும் போது விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.

ஆனால் எல்லா பெருமையும் நியூசிலாந்தையே சாரும். வெளிநாட்டு மண்ணில் அதுவும் வழக்கத்துக்கு மாறான ஒரு ஆடுகளத்தில் அவர்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளை எடுத்துக் கொண்டால், நாம் உள்நாட்டில் பெரும்பாலும் முழுமையாக சுழற்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளங்களிலேயே விளையாடுகிறோம். 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்து 300 ரன்களுக்கு மேல் எடுத்து விட்டால் ஆட்டத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் என்று நம்புகிறோம்.

ஆனால் சுழற்பந்து வீச்சில் நமது பேட்ஸ்மேன்கள் சறுக்கி விட்டால் அதன் பிறகு நிலைமை என்ன என்பது தெரியாது. இது போன்ற ஆடுகளங்களில் ஆடும் போது நமது பேட்ஸ்மேன்கள் நிறைய நம்பிக்கையை இழந்து விடுகிறார்கள். அதற்கு சரியான உதாரணம் அஜிங்யா ரஹானேவை சொல்லலாம். ரஹானே அருமையான வீரர். ஆனால் இத்தகைய ஆடுகளங்களில் விளையாடி தான் அவரது கிரிக்கெட் வாழ்க்கையே பாழாகி விட்டது.

அதாவது இது போன்ற ஆடுகளத்தில் எந்த பந்து சுழன்று திரும்பும், எந்த பந்து நேராக வரும் என்பது தெரியாது. அதனால் இதை அடித்து ஆடுவதா அல்லது தடுத்து ஆடுவதா என்ற குழப்பத்திலேயே ஒவ்வொரு முறையும் விளையாட வேண்டி இருக்கும். இதனால் விக்கெட்டுகள் தான் போகும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article