புனே,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதனிடையே முதல் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பந்துவீச்சு மிகவும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழல் இருந்தபொழுதும் கூட அவரால் விக்கெட் கைப்பற்ற முடியாதது இந்திய அணிக்கு பின்னடைவை உருவாக்கியது. அதனால் அவருக்கு ஓய்வு கொடுத்து விட்டு கடந்த இங்கிலாந்து தொடரில் அறிமுகமாகி வங்காளதேச தொடரில் அசத்திய ஆகாஷ் தீப்புக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் முகமது சிராஜின் பார்ம் கவலைக்குரியது அல்ல என இந்திய அணியின் துணை பயிற்சியாளர் டென் டஸ்சாட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சிராஜ் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பந்து வீசினார். முதல் போட்டியின் கடைசி நாள் காலை எங்களின் பவுலிங் உயர்தரமாக இருந்தது. இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் பந்தை நன்றாக நகர்த்தினார். இது நீங்கள் கேட்க விரும்பாத பதிலாக இருக்கலாம். ஆனால் நான் இதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர் நன்றாக பவுலிங் செய்யவில்லை அல்லது பார்ம் நன்றாக இல்லை என்று அர்த்தமில்லை. ஒருவேளை அவர் விக்கெட்டுகள் எடுக்காத சூழ்நிலைகளில் இருக்கிறார்.
ஆனால் அவருடைய பார்ம் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அவருடன் சில டெக்னிக்கல் விஷயங்களில் நாங்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது. குறிப்பாக அரவுண்ட் தி விக்கெட் திசையில் இருந்து ஸ்டம்ப் லைனில் வீசுவதில் கொஞ்சம் முன்னேற்றம் தேவை. ஆனால் அவருடைய வேகம், துல்லியம் ஆகியவை நன்றாக இருக்கிறது. அவர் இரண்டாவது இன்னிங்சில் நன்றாக செயல்பட்டதாகவே நான் கருதுகிறேன்" என்று கூறினார்.