நியூசிலாந்துக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி... தொடரை கைப்பற்றிய இலங்கை

2 months ago 25

காலே,

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் 'டாஸ்' ஜெயித்த இலங்கை கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 602 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மென்டிஸ் 182 ரன்களும், குசல் மென்டிஸ் 106 ரன்களும் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 88 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் சாண்ட்னெர் 29 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் மூலம் பாலோ ஆனை சந்தித்த நியூசிலாந்து 514 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை ஆடியது. 2-வது இன்னிங்சிலும் தடுமாறிய நியூசிலாந்து 199 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் மழை பெய்ததன் காரணமாக 3வது நாள் ஆட்டம் அத்துடன் ரத்து செய்யப்பட்டது.

டாம் பிளண்டெல் 47 ரன்களுடனும், கிளென் பிலிப்ஸ் 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் நிஷான் பெய்ரிஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்நிலையில், நியூசிலாந்து 315 ரன்கள் பிந்தங்கிய நிலையில் 4வது நாள் ஆட்டத்தை இன்று தொடங்கியது.

டாம் பிளண்டெல், கிளென் பிலிப்ஸ் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர். இதில் பிளண்டெல் 60 ரன்னிலும், கிளென் பிலிப்ஸ் 78 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் புகுந்த சாண்ட்னெர் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்தன.

இதில் டிம் சவுதி 10 ரன்னிலும், அஜாஸ் படேல் 22 ரன்னிலும் அவுட் ஆகினர். நிலைத்து நின்று ஆடிய சாண்ட்னெர் அரைசதம் அடித்த நிலையில் 67 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் நியூசிலாந்து 81.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 360 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் நிஷான் பெய்ரிஸ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது. 

Read Entire Article