நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி; 5 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை!

3 weeks ago 6

புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 2வது நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்தியா – நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் 3 மாற்றமாக கே.எல். ராகுல், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றிக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் இடம் பிடித்தார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லதாம் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். சுழலுக்கு சாதகமான இந்த மைதானத்தில் இரு அணிகளிலும் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தினர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும்,ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்களான வாசிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தியுள்ளார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி மிட்செல் சான்ட்னரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 156 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30, சுப்மன் கில் 30, ஜடேஜா 38 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர், 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன கான்வே 17 ரன்களிலும், அவரை தொடர்ந்து வில் யங் 23 ரன்களிலும், ரவீந்திரா 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன கேப்டன் டாம் லதாம் பொறுப்புடன் விளையாடி அணியை முன்னெடுத்து சென்றார். அவருக்கு சிறிது ஒத்துழைப்பு கொடுத்த டேரில் மிட்செல் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்த லதாம் 86 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த இன்னிங்சிலும் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். 2-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் அடித்துள்ளது. டாம் பிளண்டெல் 30 ரன்களுடனும், கிளென் பிலிப்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். நியூசிலாந்து இதுவரை 301 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

 

The post நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி; 5 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை! appeared first on Dinakaran.

Read Entire Article