நியூசி.யுடன் 2வது ஓடிஐ ஆஸி. மகளிர் அபார வெற்றி: சதமடித்த அனபெல் ஆட்டநாயகி

4 weeks ago 8

வெலிங்டன்: நியூசிலாந்துடனான 2வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி 65 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கு, நியூசிலாந்து மகளிர் அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸி விளையாடி வருகிறது. கடந்த 19ம் தேதி நடக்கவிருந்த முதல் ஒரு நாள் போட்டி மழை குறுக்கிட்டதால் கைவிடப்பட்டது. இதையடுத்து 2வது ஒரு நாள் போட்டி வெலிங்டன் நகரில் நேற்று துவங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து, பந்து வீச்சை தேர்வு செய்தது.

ஆஸி வீராங்கனைகள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 5வது விக்கெட்டுக்கு களம் புகுந்த அனபெல் சதர்லேண்ட் நியூசி பந்து வீச்சை அனாயாசமாக ஆடி துவம்சம் செய்து ரன் வேட்டையில் ஈடுபட்டார். 81 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 105 ரன் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். 50 ஓவர் முடிவில் ஆஸி, 7 விக்கெட் இழப்புக்கு 291 ரன் குவித்தது.
இதையடுத்து 292 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசி களமிறங்கியது.

ஆஸி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நியூசி வீராங்கனைகள் அடுத்தடுத்து வீழ்ந்தனர். 30.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் ஆகியும் மழை தொடர்ந்ததால் டிஎல்எஸ் முறையில், வெற்றி இலக்கு 188 ஆக குறைக்கப்பட்டு, 65 ரன் வித்தியாசத்தில் ஆஸி வெற்றி வாகை சூடியதாக அறிவிக்கப்பட்டது. ஆட்ட நாயகியாக அனபெல் சதர்லேண்ட் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, 1-0 என்ற கணக்கில் இத் தொடரில் ஆஸி முன்னிலை வகிக்கிறது. 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வெலிங்டன் நகரில் நாளை நடக்கவுள்ளது.

The post நியூசி.யுடன் 2வது ஓடிஐ ஆஸி. மகளிர் அபார வெற்றி: சதமடித்த அனபெல் ஆட்டநாயகி appeared first on Dinakaran.

Read Entire Article