
சென்னை,
கேரளாவில் ஆண்டுதோறும் சீசன் போல் நிபா வைரஸ் பரவல் இருந்து வருகிறது. குறிப்பாக கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக பாதிப்பு இருந்து வருகிறது. இதில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.
இந்தசூழ்நிலையில் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு அருகே குமரமபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் 58 வயது நபர். இவர், கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், அவருக்கு குணமாகவில்லை. இதையடுத்து அவர், மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னா அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் சில தினங்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கேரளாவில் நிபா வைரஸுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து மாநில சுகாதாரத்துறை நிபா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், கேரளாவில் நிபா வைரஸ் தொற்றுக்கு 2 பேர் பலியானதையடுத்து நீலகிரி மாவட்ட தமிழக - கேரள எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நாடு காணி, தாளூர் உள்ளிட்ட 8 சோதனை சாவடிகளில் சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வரும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை, நிபா வைரஸ் குறித்து விழிப்புணர்வோடு இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.