நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

3 months ago 22
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 19 பேர் காயமடைந்தனர். எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தவர்கள் மாற்று ரயில்கள் மூலம் இன்று காலை அனுப்பிவைக்கப்பட்டனர். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவிற்கு நேற்று காலை 10:30 மணிக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இரவு 7.30 மணிக்கு சென்னை பெரம்பூருக்கு வந்த அந்த ரயில் ஆந்திரமாநிலம் கூடூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இரவு 8.30 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கவரைப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், 4 குளிர்சாதனப் பெட்டிகள் உள்பட 13பெட்டிகள் தடம் புரண்டன. சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தி அணைத்தனர். விபத்து குறித்து அறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட போலீசார் மற்றும் ஆவடியில் இருந்து தமிழக பேரிடர் மீட்புப் படையினரும், உள்ளூர்வாசிகளும் விரைந்து வந்து ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். பயணிகளுக்குத் தேவையான வசதிகளை செய்து தருமாறு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், அமைச்சர் நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பயணிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடத்துக்கு ஏற்பாடு செய்தனர். ரயில் விபத்தில் காயமடைந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களைப் பார்வையிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்துகொடுக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். பிரதான தடத்தில் வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் அதே தடத்தில் செல்வதற்கு சரியாக சிக்னல் வழங்கப்பட்டிருந்த போதும் திடீரென லூப் லைனுக்கு மாறி அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதாகவும், ரயில் தடம் மாறியதற்கு காரணம் என்ன என விசாரணை நடந்து வருவதாகவும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.  
Read Entire Article