
புதுடெல்லி,
டெல்லி மருத்துவ கவுன்சிலை கலைக்க அனுமதி கோரி துணை நிலை கவர்னருக்கு டெல்லி சுகாதார மந்திரி பங்கஜ் சிங் முன்மொழிவை அனுப்பியுள்ளார். கவுன்சிலில் நிதி முறைகேடுகள், பதிவுகளில் வேற்றுமைகள் மற்றும் தவறான நிர்வாக செயல்பாடு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு கவுன்சிலை, மந்திரி சிங் கலைத்துள்ளார்.
இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த முன்மொழிவை டெல்லி கவர்னரிடம் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளோம். அவர் அதனை ஏற்பதற்காக காத்திருக்கிறோம். இந்த விவகாரத்தில், நாங்கள் விசாரணை நடத்த உள்ளோம் என கூறியுள்ளார்.
கவுன்சிலின் பொறுப்புகளை அடுத்த உத்தரவு வரும்வரை சுகாதார சேவைகளுக்கான இயக்குநர் கவனித்து கொள்வார். அவருடன் ஆலோசனை மேற்கொண்டு தேர்தல் நடத்தப்படும் என்றார். தலைவரின் பதவி காலமும் கூட முடிவடைய உள்ளது என்றும் அவர் கூறினார்.