
டெல்லி,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்குமேல் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.
தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., பா.ம.க., பா.ஜ.க., நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுக்கத்தொடங்கி விட்டன. கூட்டணி குறித்தும் அரசியல் கட்சிகள் தற்போதே முடிவுகளை எடுக்கத்தொடங்கி விட்டன.
அந்த வகையில், கடந்த மாதம் 25ம் தேதி பா.ஜ.க. மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். டெல்லியில் நடந்த இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சி.வி. சண்முகம், தம்பிதுரை, கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதனை தொடர்ந்து தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமையும் என தகவல்கள் பரவின. அதேவேளை, 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற பா.ஜ.க. தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கடந்த 1ம் தேதி தமிழக சட்டசபை அரங்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனின் இருக்கைக்கு சென்று அங்கு 10 நிமிடங்கள் அமர்ந்து அவரிடம் பேசினார். இந்த சம்பவங்களால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவரும், நிதி மந்திரியுமான நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான தம்பிதுரை இன்று சந்தித்தார். டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. கடந்த சில நாட்களாக பா.ஜ.க. , அ.தி.மு.க. தலைவர்கள் இடையேயான சந்திப்பு இரு கட்சிகளும் சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க முயற்சித்து வருகின்றனவா? என்ற கேள்விக்கு வலுசேர்க்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.