நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

2 weeks ago 5

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னை மயிலாப்பூர் பகுதியில் மயிலாப்பூர் இந்து நிதிநிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாக இயக்குநராக இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கட்சியின் நிறுவனா் தேவநாதன் யாதவ் உள்ளார். இந்த நிறுவனம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் ஆயிரக்கணக்கானோர் பணத்தை முதலீடு செய்து வந்துள்ளனா். முதலீடு செய்யும் தொகைக்கு நல்ல வட்டி கிடைக்கும் என விளம்பரமும் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து, அந்நிதி நிறுவனத்தின் இயக்குநரும் பாஜக கூட்டணி கட்சி தலைவருமான தேவநாதன் உள்பட 6 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் பிணை கோரி தேவநாதன் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்கனவே சிறப்பு நீதிமன்றம் இரண்டுமுறை தள்ளுபடி செய்தது. தேவநாதன், குணசீலன் ஆகியோர் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி தனபால் முன்பு வந்தபோது குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பா ஆஜராகி விசாரணை நடைபெற்று வருவதாகவும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர் . மோசடி தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் வாதம் வைத்தார். பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி மக்களின் 600 கோடி தொடர்புடைய மோசடி என்றும் தெரிவித்தார்.

தேவநாதன் நிதி நிறுவனத்தின் இயக்குநர் ஆவதற்கு முன்னதாக நிதிநிலைமை சீராக இருந்ததாகவும். அவர் இயக்குநர் ஆன பின்பு மோசமாகிவிட்டதாகவும் தெரிவித்து பொருளாதார குற்றங்களை தீவிரமாக கருத வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இருவரையும் பிணையில் விடுவிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.

Read Entire Article