சென்னை: மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாது என ஒன்றிய அரசு பிளாக்மெயில் செய்வதை தமிழர்கள் ஒரு நாளும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிறைவு போட்டியில் வெற்றி பெற்ற 37 மாவட்டங்களைச் சேர்ந்த 333 மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழினை வழங்கி, கருணையடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கி மற்றும் வெளிநாடு செல்ல தடையின்மைச் சான்று வழங்க இணையவழி நுழைவாயிலினை (Online Portal) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு உயர்கல்வித் துறை செயலாளர் சமயமூர்த்தி தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியன் பேசுகையில், அயல்நாடு செல்லும் ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் எளிதாகவும் குறுகிய காலத்தில் தடையின்மைச் சான்று பெற ஏதுவாக, இணையவழியில் நுழைவாயில் (Online Portal), கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பல ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு இடமாறுதலுக்கு பொது கலந்தாய்வு நடைபெறாமல் இருந்தது. அதனை தற்போது நடத்தி பல நூறு ஆசிரியர்கள் சமீபத்தில் பயனடைந்துள்ளனர் என்றார்.
பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கல்லூரி கல்விக்கே நீட், க்யூட் நுழைவுத் தேர்வை மட்டுமே வைத்து மாணவர்கள் தரத்தை முடிவு செய்வது என்பது முற்றிலும் நயவஞ்சகமானது. 3,5,8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பது தேவையற்ற ஒன்று. இது இடைநிற்றலையே ஊக்குவிக்கும். தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கையையும் தற்போதுள்ள 10+2+3 என்ற கல்வி முறையே மாற்றக்கூடாது என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாகும்.
மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாது என்று பிளாக்மெயில் செய்வதை தமிழர்கள் ஒரு நாளும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். ஒன்றிய அமைச்சரின் இந்த பேச்சு அகம்பாவம் மற்றும் ஆணவத்தின் உச்சம் ஒரு போதும் நிதிக்காக தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் யாருக்காகவும் அடி பணிய மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
The post நிதி கிடையாது என பிளாக் மெயில் செய்வதை தமிழர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்: அமைச்சர் கோவி. செழியன் கண்டனம் appeared first on Dinakaran.