
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டம் நூர்பூர் பினானு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் தீக்ஷா (வயது 22). இவருக்கும் மொராதாபாத் மாவட்டம் ஷிவ்புரி கிராமத்தை சேர்ந்த சவுரப் என்ற இளைஞருக்கு நேற்று திருமணம் நடைபெறவிருந்தது.
திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நேற்று முன் தினம் இரவு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, தீக்ஷா தனது சகோதரிகளுடன் நடனமாடி மகிழ்ந்துகொண்டிருந்தார்.
அப்போது திடீரென தீக்ஷாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக தனது அறையில் ஓய்வு எடுக்க செல்வதாக கூறி விட்டு சென்றார். அறைக்கு சென்ற தீக்ஷா வெகுநேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தீக்ஷா மெத்தையின் அருகே மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. தீக்ஷாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தீக்ஷாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை. அதேபோல், தீக்ஷாவின் உடலை பிரேத பரிசோதனை செய்யவும் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை.