இந்தியா-அமெரிக்கா உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடி முக்கிய பங்காற்றியுள்ளார் - வெள்ளை மாளிகை

3 hours ago 2

வாஷிங்டன்,

பிரான்ஸ் நாட்டில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் இணை தலைமையேற்பதற்காக பிரதமர் மோடி கடந்த 10-ந்தேதி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். இதன்பின்னர், பாரீஸ் நகரில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டில், அந்நாட்டு அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி ஒன்றாக பங்கேற்றார்.

பிரான்ஸ் சுற்றுப்பயணம் முடிந்ததும், பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டார். இன்று காலை அந்நாட்டுக்கு சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் அந்நாட்டுக்குள் மட்டுமின்றி உலகெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை சந்தித்து பேச உள்ளார்.

இந்திய நேரப்படி நாளை(வெள்ளிக்கிழமை) அதிகாலையில் 2.30 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தனது அமெரிக்க பயணம் குறித்து பிரதமர் மோடி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், "நண்பர் டிரம்ப் உடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இந்தியா, அமெரிக்கா இடையே ஒரு விரிவான கூட்டுறவை உருவாக்க, அவரது முதல் பதவிக்காலத்தில் இணைந்து பணியாற்றியதை நினைவில் கொண்டுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் இடையிலான சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடிக்கு அலுவல் ரீதியாக அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்க உள்ளார். இதில் இருதரப்பு சந்திப்பு, கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இரவு உணவு ஆகியவை அடங்கும்.

பிரதமர் மோடியுடனான தனது நெருங்கிய உறவையும், இந்தியா-அமெரிக்கா உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடி ஆற்றிய முக்கிய பங்களிப்பையும் டிரம்ப் பெருமிதத்துடன் நினைவில் கொண்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை தொடர்ந்து கட்டியெழுப்புவதை டிரம்ப் எதிர்நோக்குகிறார்" என்று தெரிவித்துள்ளார். 

Read Entire Article