சென்னை,
இயக்குனர் பாலா, அருண் விஜய் நடிப்பில் 'வணங்கான்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜய்யுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
"வணங்கான்" படத்தின் ஆடியோ வெளியீட்டையும், இயக்குநர் பாலாவின் இருபத்தைந்தாம் ஆண்டு கலைப்பயணத்தையும் இணைத்து இரட்டை விழாவாக நாளை மாலை 5 மணியளவில் சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடத்த உள்ளதாக ஏற்கனவே "வணங்கான்" படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நாளை "வணங்கான்" படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதை படக்குழு போஸ்டர் மூலம் தற்போது தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பாலா. இயக்குனர் பாலு மகேந்திராவின் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், 1999-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி வெளியான சேது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சேது படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 'சேது'விற்காக சிறந்த படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றார் பாலா. தவிர, சிறந்த இயக்குநருக்கான தமிழ்நாடு அரசு விருது உள்பட பல விருதுகளையும் 'சேது' குவித்தது. அதனை தொடர்ந்து நந்தா, பிதாமகன், அவன் இவன், பரதேசி உள்ளிட்ட தரமான வெற்றிப் படங்களை கொடுத்தார்.