புதுடெல்லி: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி ஒன்றில், ‘வருகிற புதிய நிதியாண்டு (ஏப்ரல் 1, 2025) முதல் (நாளை மறுநாள்), வருமான வரி (ஐடி) துறை அதிகாரிகள் பொதுமக்களின் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் மின்னஞ்சல் கணக்குகள் போன்ற டிஜிட்டல் தொடர்பு தளங்களைக் கண்காணிப்பார்கள். வருமான வரிச் சட்டம் – 2025-இன் விதிகளின்படி, பொதுமக்களுக்குச் சொந்தமான இந்தத் தகவல் தொடர்பு தளங்களின் கணக்குகளை நிதியமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணிக்கும். சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்தும். புதிய வருமான வரிச் சட்டமானது, வருமான கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிக்க அனுமதிக்கிறது.
பழைய சட்டத்தின் பெரும்பாலான விதிகளும் புதிய சட்டத்தில் இருந்தாலும், புதிய சட்டத்தின் முக்கிய நோக்கம் கணக்குகளை எளிமைப்படுத்துவதாகும். வரி ஏய்ப்பை நிரூபிப்பதற்கான ஆதாரமாக டிஜிட்டல் கணக்குகளில் காணப்படும் ஆதாரங்களை நீதிமன்றங்களில் சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு வாய்ப்பு உள்ளது. சமீபத்தில், செல்போன்களில் ரகசிய குறியீடுகள் மூலம் ரூ. 200 கோடி கணக்கில் வராத பணத்தை கண்டுபிடித்து கைப்பற்றினோம். வாட்ஸ்அப் செய்திகள் மூலம் கிரிப்டோ சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டன. கணக்கில் வராத ரூ.200 கோடி பணத்தை மீட்க வாட்ஸ்அப் தொடர்பு உதவியது. கூகுள் மேப்ஸ் உதவியுடன், கருப்புப் பணத்தை மறைக்க அடிக்கடி செல்லும் இடங்களை அடையாளம் காண முடிந்தது. பினாமி சொத்துக்களின் உரிமையாளரைத் தீர்மானிக்க டெலிகிராம் கணக்குகள் பகுப்பாய்வு செய்யப்படும்’ என்று கூறினர்.
The post நாளை மறுநாள் முதல் மக்களின் டிஜிட்டல் தொடர்பு கண்காணிப்பு: ஒன்றிய நிதியமைச்சர் தகவல் appeared first on Dinakaran.