திருமலை: நாளை மறுதினம் ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் பூமியில் சிறிய பொருளையும் துல்லியமாக காட்டும் தன்மை கொண்டது என திருப்பதியில் இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் இருந்து நாளை மறுதினம் 101வது ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.
இதனையொட்டி இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் அதன் இயக்குனர்கள் உள்ளிட்டோர் இன்று சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு ரங்கநாயக மண்டபத்தில் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் வெளியே வந்த இஸ்ரோ தலைவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நாளை மறுதினம் இஸ்ரோவின் 101 ராக்கெட் விண்ணில் ஏவப்படும். பிஎஸ்எல்வி சி-61 எக்ஸ்எல் எனப்படும் இந்த ராக்கெட் மூலம் செலுத்தப்படுகிறது. ஆர்ஐஎஸ்ஏடி-1பி செயற்கைகோள் மூலம் பூமியில் உள்ள சிறிய அளவிலான பொருட்களையும் துல்லியமாக கண்டறியும் புவி கண்காணிப்புக்காக ஏவப்படுகிறது. கடந்த 1962ம் ஆண்டு தொடங்கப்பட்ட இஸ்ரோ, தற்போது 63ம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ளது. இந்த ராக்கெட்டில் 1,710 கிலோ எடைகொண்ட இ.ஓ.எஸ்-09 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இதனையடுத்து நாசாவுடன் அமெரிக்கா, இந்தியா இணைந்து ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்படும். இதனையடுத்து வணிக ரீதியான அமெரிக்கா செயற்கைக்கோள் விண்ணில் செலுத்த உள்ளது. ககன்யான் திட்டம் மிக சிறப்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தாண்டு மனிதர்கள் இல்லாமல் அனுப்பி வைக்கப்படும். 2027, மார்ச் மாதத்தில் மனிதர்களுடன் ககன்யான் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post நாளை மறுதினம் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் பயணம்; பூமியில் சிறிய பொருளையும் துல்லியமாக காட்டும்: இஸ்ரோ தலைவர் தகவல் appeared first on Dinakaran.