நாளை மண்டல பூஜை சபரிமலையில் 2 நாளில் 2 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் தரிசனம்

3 weeks ago 5

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல கால பூஜைகள் கடந்த நவம்பர் 16ம் தேதி தொடங்கியது. 41 நாள் மண்டல காலம் நாளை நடைபெறும் பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது. மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப விக்கிரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்படும் இந்த தங்க அங்கி இன்று மதியம் பம்பையை அடையும்.

பம்பை கணபதி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வைக்கப்பட்ட பின்னர் சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்படும். மாலையில் சரங்குத்தியில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் தங்க அங்கி ஊர்வலத்திற்கு வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் இந்த தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும். நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் தொடங்கும். நண்பகல் 12க்கும் 12.30க்கும் இடையே பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும்.

தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்குப் பின்னர் இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடி நடை சாத்தப்படும். நாளையுடன் இந்த வருட மண்டல காலம் நிறைவடையும். மீண்டும் மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். அன்று வரை 3 நாட்கள் சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். மண்டல பூஜையை முன்னிட்டு இன்றும், நாளையும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று 50 ஆயிரம் பேருக்கும், நாளை 60 ஆயிரம் பேருக்கும் மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும்.

இந்த நாட்களில் உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணிக்குப் பின்னர் மாலை 5 மணி வரை பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சபரிமலையில், நேற்று முன்தினம் 1,06,621 பேர் தரிசனம் செய்தனர். சபரிமலை கோயில் வரலாற்றில் மண்டல காலத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றும் 95 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்தனர்.

The post நாளை மண்டல பூஜை சபரிமலையில் 2 நாளில் 2 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article