நாளை புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் * கனமழை எச்சரிக்கையால் விரிவான ஏற்பாடுகள் * அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு திருவண்ணாமலையில்

3 months ago 14

திருவண்ணாமலை, அக்.15: திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார். திருவண்ணாமலையில் அண்ணாமலையாரே மலை வடிவாக காட்சியளிப்பதால், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீபமலையை வலம் வந்து (கிரிவலம்) சென்று வழிபடுகின்றனர். அதன்படி, புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை (16ம் தேதி) இரவு 8 மணிக்கு தொடங்கி, நாளை மறுதினம் (17ம் தேதி) மாலை 5.34 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, நாளை இரவு கிரிவலம் செல்ல உகந்ததாக அமைந்துள்ளது. இந்நிலையில், பவுர்ணமி கிரிவலம் முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார். அதில், எஸ்பி சுதாகர், டிஆர்ஓ ராமபிரதீபன், கோயில் இணை ஆணையர் ஜோதி, ஆர்டிஓ மந்தாகினி, மகளிர் திட்ட அலுவலர் சரண்யாதேவி உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்ததாவது: பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அமைந்துள்ள நாட்களில், கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, கிரிவலத்துக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை முறையாக செய்து தர வேண்டும். குறிப்பாக, தற்காலிக பஸ் நிலையங்களில் மழை நேரத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதேபோல், அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்கு செல்லும் வரிசைகளில் முறையாக தகர சீட்டுகள் மூலம் பந்தல் அமைக்க வேண்டும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். கிரிவலப் பாதையில் மழைநீர் தேங்காமல் கண்காணிக்க வேண்டும். பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் இடையூறு இல்லாதபடி தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரம், குடிநீர், மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல், கிரிவலப்பாதை மற்றும் நகரின் முக்கிய இடங்களை தூய்மையாக பராமரித்தல் அவசியம். மேலும் கிரிவலப் பாதையில் திருநங்கைகளால் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதபடி கண்காணிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

The post நாளை புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் * கனமழை எச்சரிக்கையால் விரிவான ஏற்பாடுகள் * அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு திருவண்ணாமலையில் appeared first on Dinakaran.

Read Entire Article