சென்னை,
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்த நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 900 நாட்களுக்கும் மேலாக ஏகானாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழக வெற்றில் கழக தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என தீர்மானமும் நிறைவேற்றி இருந்தார்.
இதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பரந்தூர் போராட்ட குழுவினர் நன்றி தெரிவித்தனர். தீர்மானத்துடன் நின்று விடாமல், பரந்தூர் மக்களை சந்திக்கவும் விஜய் திட்டமிட்டார். இதற்காக காஞ்சீபுரம் மாவட்ட போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக விஜய் மக்களை சந்திக்கும் நிகழ்வு என்பதால் ஏற்பாடுகளை தமிழக வெற்றிக்கழகத்தினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை விஜய் நாளை சந்திக்கிறார். இதன்படி பரந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் போராட்டக் குழுவினரையும், கிராம மக்களையும் நாளை விஜய் நேரில் சந்திக்க உள்ளார். ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் சந்திப்பு நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அங்கு எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஏகனாபுரம் பகுதியில் மழை பெய்து வருவதால் பரந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் விஜய் மக்களை சந்திக்கிறார். நாளை மதியம் 1 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.