நாளை திரையரங்குகளில் வெளியாகும் 8 தமிழ் படங்கள்

6 hours ago 1

சென்னை,

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் நாளை (07.03.2025) வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்து தகவலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

'கிங்ஸ்டன்'

இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ள படம் கிங்ஸ்டன். இதில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன. இந்த படமானது இந்தியாவின் முதல் கடல் பேய் படமாகும். எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

'ஜென்டில்வுமன்'

அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் 'ஜென்டில்வுமன்' திரைப்படம் உருவாகியுள்ளது. கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் உடன் லாஸ்லியாவும் நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஜெய்பீம் படத்தில் அசத்திய லிஜோமோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மெட்ராஸ், காலா, நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்து கவனம் ஈர்த்த ஹரிகிருஷ்ணன் இதில் நடித்துள்ளார்.

'எமகாதகி'

பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் அமானுஷ்ய சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் 'எமகாதகி'. இப்படத்தில் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். படத்தை சரங் பிரதார்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இயற்கைக்கு அப்பாற்பட்டு இறப்பு வீட்டில் நடக்கும் கதையையும், அமானுஷ்யமான விஷயத்தையும் இந்தப் படம் பேசுகிறது.

'அஸ்திரம்'

அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் கதையில் ஷாம் நடித்துள்ள படம் 'அஸ்திரம்'. இப்படத்தில் நீரா மற்றும் வெண்பா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பெஸ்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் உரிமை 5ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது.

'மர்மர்'

ஹேமந்த் நாராயணன் 'மர்மர்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படமே தமிழில் உருவாகியுள்ள முதல் பவுண்ட் புட்டேஜ் ஹாரர் திரைப்படமாகும். பவுண்ட் புட்டேஜ் ஹாரர் திரைப்படங்கள் என்றால் திரைப்படத்தின் காட்சிகள் பெரும்பாலானவை டேப் ரெகார்டர், சிசிடிவி கேமரா பூட்டஜ் போலயே காட்சி படுத்திருப்பர். இதன் மூலம் உண்மையாகவவே அந்த அமானுஷ்ய சம்பவ உணர்வை அது பார்வையாளர்களுக்கு கடத்தும். இப்படத்தை ஸ்டான் அலோன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

'லெக் பீஸ்'

இயக்குநர் ஸ்ரீநாத் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லெக் பீஸ்'. இதில் வி டி வி கணேஷ் , ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், ரமேஷ் திலக், மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மாசாணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிஜோர்ன் சுர ராவ் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஹீரோ சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி. மணிகண்டன் தயாரித்திருக்கிறார்.

'நிறம் மாறும் உலகில்'

அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் பாரதி ராஜா நடித்துள்ள படம் நிறம் மாறும் உலகில். இந்த படத்தில் நட்டி,யோகி பாபு, ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தைப் பேசும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

'படவா'

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விமல் மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'படவா'. இப்படத்தை கே.வி நந்தா இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஜான் பீட்டர் இத்திரைப்படத்தை தயாரித்து இசையமைத்துள்ளார். ஜே ஸ்டூடியோ இண்டர்நேஷனல் தயாரித்துள்ள இப்படம் விவசாயம் பற்றி பேசும் சமூக பொறுப்புள்ள படமாக 'படவா' உருவாகியுள்ளது.

 

Read Entire Article