
சென்னை,
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் நாளை (14.03.2025) வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்து தகவலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
தமிழ்நாட்டில் நாளை ஒரே நாளில் 2 ரீ-ரிலீஸ் படங்கள் உட்பட 10 படங்கள் வெளியாக உள்ளதால் சினிமா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஸ்வீட் ஹார்ட்
ரியோ ராஜ், யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஸ்வீட்ஹார்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் எழுதி இயக்கும் இந்த படத்தில் கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா தயாரித்து, இசையமைக்கும் 'ஸ்வீட்ஹார்ட்' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.
பெருசு
இயக்குனராக மட்டுமில்லாமல் தனது ஸ்டோன்பென்ச் நிறுவனத்தின் மூலம் பல படங்களையும் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வருகிறார். அவரது தயாரிப்பில் 16-வது படமாக 'பெருசு' என்ற படம் தயாராகி உள்ளது. இதில் வைபவ் மற்றும் அவரது சகோதரர் சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் வைபவ் தவிர சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, தீபா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் இறுதிச் சடங்கு சம்பந்தமான கதைக்களத்தில் காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகிறது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ராபர்
நாயகன் தேர்ந்தெடுத்த பாதை அவன் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதே 'ராபர்'படத்தின் கதை. எஸ்.எம்.பாண்டி இயக்கி இருக்கும் இப்படத்திற்கு 'மெட்ரோ 'திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் திரைக்கதை எழுதியுள்ளார். சத்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார்.
வருணன்
கேப்ரியல்லா, துஷ்யந்த் ஜெயபிரகாஷுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் வருணன். இப்படத்தை யாக்கை பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயவேல்முருகன் இயக்கியுள்ளார். படத்தில் ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இசையை போபோ சாஷி மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவை ஸ்ரீராம சந்தோஷ் மேற்கொண்டுள்ளார்.
மாடன் கொடை விழா
கோகுல் கவுதம், ஷருமிஷா, சூர்ய நாராயணன் மற்றும் சூப்பர்குட் சுப்ரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் 'மாடன் கொடை விழா'. இதை ஆர்.தங்கபாண்டி இயக்கியுள்ளார். சிவப்பிரகாசம் தயாரிக்க விபின் ஆர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்
ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படத்திற்கு "கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்" என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தை உன்னை நான் சந்தித்தேன்,உதயகீதம் ,உயிரே உனக்காக, நினைவே ஒரு சங்கீதம் போன்ற திரைப்படங்களை இயக்கிய வெற்றி இயக்குனர் கே.ரங்கராஜ் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க, கதாநாயகியாக பூஜிதா நடித்துள்ளார். இரண்டாவது நாயகனாக பரதனும் இரண்டாவது நாயகியாக நிமி இமானுவேலும் நடித்துள்ளனர். மேலும், பார்கவ் , நம்பிராஜன், கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன், மாஸ்டர் விஷ்னவா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் மை இந்தியா மாணிக்கம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
குற்றம் குறை
கால பைரவா மூவிஸ் தயாரித்து வெளிவர இருக்கும் படம் "குற்றம் குறை". எங்கே குற்றம் நடந்தாலும் அதை அப்போதே தடுத்து உடனே அந்த குற்றத்தை குறைக்க நினைக்கும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் கதை தான் "குற்றம் குறை ". லூகாஸ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார் . இவர் விஜய் சேதுபதியின் ஜெராக்ஸ் காபி போல இருப்பது மற்றும் ஒரு சிறப்பு.
டெக்ஸ்டர்
தமிழ், மலையாளத்தில் 'டெக்ஸ்டர்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் கதாநாயகனாக ராஜு கோவிந்த், நாயகியாக யுக்தா பிரேமி நடித்துள்ளனர். இந்தப் படத்தை சூரியன் ஜி இயக்கி உள்ளார். பிரகாஷ் எஸ்.வி. தயாரித்துள்ளார். இப்படம் பிரபல ஹாலிவுட் கிரைம் திரில்லர் வெப் தொடரான டெக்ஸ்டரின் தொடர்ச்சி என்று இயக்குனர் சூரியன்.ஜி கூறி இருக்கிறார்.
ரஜினி முருகன்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான 'ரஜினிமுருகன்' திரைப்படம் மீண்டும் திரைகளில் வெளியிடப்படவுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்த இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். படத்தில் வந்த அனைத்துப் பாடல்களும் ஹிட்டாகின. திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் நாளை ரஜினிமுருகன் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி
2004ம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், அசின், நதியா, பிரகாஷ் ராஜ் மற்றும் விவேக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' திரைப்படம். இப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்தார் படத்தில் இடம் பெற்ற பாடலகள் அனைத்தும் ஹிட்டானது. கணவனை பிரிந்து மகனை வளர்க்கும் தாயின் அன்பு, அவள் படும் கஷ்டங்கள், தாய்க்காக மகன் செய்யும் செயல்கள் என மிகவும் நேர்த்தியாக இப்படத்தின் கதைக்களம் உருவாகியிருக்கும். குறிப்பாக ரவி மோகன் மற்றும் நதியாவின் காம்பினேஷன் மிக அழகாக வொர்க் அவுட் ஆகியிருக்கும். இத்திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படத்தை மீண்டும் நாளை ரிலீஸ் செய்கின்றனர்.