தற்கொலை செய்து கொண்ட டாக்டர் குடும்பம்: பைனான்சியருக்கு போலீசார் வலைவீச்சு

10 hours ago 1

சென்னை,

சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் பாலமுருகன் (53). இவரது மனைவி சுமதி(47) சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 18 வயதில் ஜஸ்வந்த் குமார் மற்றும் 16 வயதில் லிங்கேஷ் குமார் என்று இரு மகன்கள் இருக்கின்றனர்.

டாகர் பாலமுருகனுக்கு ரூ.5 கோடி அளவிற்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், குடும்பத்தினர் 4 பேரும் அவரின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துது.

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தற்கொலை செய்து கொண்ட 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து ஏதேனும் கடிதம் உள்ளதா? என்பது குறித்து பாலமுருகன் வீட்டில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. இதனைத்தொடர்ந்து, வீட்டில் இருந்து 5 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளிலும், பாலமுருகனின் உறவினர்கள் மற்றும் ஸ்கேன் சென்டரில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக பாலமுருகன் தனது குடும்பத்தினருடன் இந்த தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரியவந்தது. இதன்படி ஸ்கேன் சென்டர் வளர்ச்சிக்காக பாலமுருகன் ரூ.5 கோடி வரையில் வங்கியில் கடன் பெற்றுள்ளதாகவும், அதற்கு மாதம் ரூ.6 லட்சம் வரை இ.எம்.ஐ. (மாதாந்திர தவணைத் தொகை) முறையில் வட்டி கட்டி வந்ததும் தெரிய வந்துள்ளது.

மேலும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலரிடம் தொழிலை விரிவுபடுத்த கடன் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எதிர்பார்த்த அளவு தொழிலில் முன்னேற்றம் இல்லாததால், கடனை திருப்பி செலுத்த முடியாமல் பாலமுருகன் தவித்துள்ளார். இதன் காரணமாக விரக்தியில் இருந்து வந்துள்ள பாலமுருகன் குடும்பத்தாருடன் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

பாலமுருகன் வீட்டில் 4 பேருக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த காசோலைகளையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். டாக்டர் பாலமுருகனை பார்க்க, அவரது வீட்டுக்கு பலர் வந்து போவதுண்டு. அந்த வகையில், கடன் கொடுத்தவர்கள் யாரேனும் வீட்டுக்கு வந்து மிரட்டி விட்டு சென்றார்களா? என்றும், கடந்த சில தினங்களில் டாக்டர் பாலமுருகனை யார் யார் வந்து வீட்டில் சந்தித்தார்கள்? என்பதை அறிவதற்காக குடியிருப்பு வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களில் டாக்டர் பாலமுருகன் வழக்கம் போல் பேசினாரா?, அவரது செயல்களில் மாற்றம் ஏதாவது இருந்ததா? எனவும் அவரின் வீட்டில் பணிபுரியும் வேலையாட்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் கந்து வட்டிக்கு பணம் வாங்கியிருந்தாரா? அதை கொடுக்க வேண்டும் என யாரும் மிரட்டினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டது.

இந்நிலையில் டாக்டர் குடும்பம் தற்கொலை செய்த சம்பவத்தில் சிவக்குமார் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், பைனான்சியர் வெற்றி என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read Entire Article