
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த குப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தின்னூரை சேர்ந்தவர் விக்டர் பாபு, விவசாயி. இவருடைய மனைவி அந்தோணியம்மாள். இவர்களின் மகன் எட்வின் பிரியன் (வயது 23). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், தளி அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தெருநாய் ஒன்று கடித்தது. இதை அவர் யாரிடமும் சொல்லவில்லை. மேலும் நாய்க்கடிக்கான சிகிச்சையையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அடிக்கடி எச்சில் துப்பியவாறும், சத்தம் போட்டு அலறியவாறும் இருந்து வந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை கக்கதாசத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.தொடர்ந்து பாதிப்பு இருந்ததால் அவர் தளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு நாய்க்கடிக்கான ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.
பின்னர் இரவு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட எட்வின் பிரியன் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர் மற்றும் அவருடன் இருந்த உறவினர்கள் என 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக நேற்று ஓசூர் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டது.