நாய்கள் கடித்து குதறியதில் 9 வயது சிறுவன் திடீர் சாவு

3 months ago 11

*உறவினர்கள் அதிர்ச்சி

ஓசூர் : ஓசூர் அருகே நாய் கடித்து குதறிய நிலையில் 9 வயது சிறுவன் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நாகமங்கலம் ஊராட்சி நீலகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ். சென்ட்ரிங் தொழிலாளயான இவரது ஒரே மகன் நந்தீஸ் (9). இவன், அங்குள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தான். மாதேஷின் மனைவி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார்.

சிறுவன் நந்தீசை அவருடைய பாட்டி வளர்த்து வந்துள்ளார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு நந்தீஸ் பள்ளிக்கு செல்லும் வழியில் தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடித்துள்ளது. நாய் கடித்த விபரத்தை சிறுவன் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளான். நேற்று முன்தினம் நந்தீசுக்கு மூச்சு வாங்கியது. இதையடுத்து, பாட்டி மற்றும் அத்தை ஆகியோர் அவனை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடர்ந்து நந்தீசுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சூளகிரி அருகே சிறுவன் உயிரிழந்து விட்டதாக கூறி, மறுபடியும் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு நந்தீஸ் உயிரிழந்ததை உறுதி செய்தனர். பின்னர், சிறுவனின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post நாய்கள் கடித்து குதறியதில் 9 வயது சிறுவன் திடீர் சாவு appeared first on Dinakaran.

Read Entire Article