நாய் கடியால் பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவமனையில் ஏஆர்வி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

8 hours ago 3

சென்னை: பொது மக்கள் ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஏஆர்வி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த ஒரு நபர் நாய் கடித்து 3 மாதம் ஆகியும் ரேபீஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதால் இறந்துவிட்டார் என விசாரணையில் தெரிய வந்தது. எனவே மக்கள் அனைவரும் நாய் கடித்த உடன் ஏஆர்வி (Anti-Rabies vaccine) எனப்படும் தடுப்பூசியை செலுத்திக் கொள்வது அவசியமாகிறது. ரேபீஸ் ஒரு கொடிய வைரஸ் நோய். இந்நோயால் பாதிக்கப்பட்ட நாய், மனிதனை கடிப்பதால் மனிதன் பாதிப்புக்கு உள்ளாகிறான்.

நாய்கள் கடிப்பதால் மட்டும் இல்லாமல், நாய் புரண்டினால் உடலில் உள்ள சிறுகாயங்களில் உமிழ்நீர் பட்டாலும் ரேபீஸ் பரவும். ரேபீஸ் நோய்க்கு ஏஆர்வி எனப்படும் தடுப்பூசி உள்ளது. நாய் கடித்தவுடன் 4 ஊசிகள் போட்டு கொள்வதன் மூலம் ரேபிஸ் நோயை 100 சதவீதம் வரவிடாமல் தடுத்து விடலாம். மேலும், நாயின் ஆழமான கடிகளுக்கு ஏற்ப இம்யூனோகுசோபுளின் மருந்தும் அளிக்கப்படுகிறது. இந்த ஏஆர்வி மற்றும் இம்யூனோகுளோபுளின் தடுப்பூசிகள் அனைத்து அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 24 மணிநேரமும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் வெறிநாய்கடியின் அவசியத்தை அறிந்து உரிய நேரத்தில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று ரேபீஸ் எனப்படும் வெறிநாய்க்கடியிலிருந்து தற்காத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என பொதுசுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post நாய் கடியால் பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவமனையில் ஏஆர்வி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article