நாம் யார் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்… : சொல்கிறார் சம்யுக்தா விஜயன்!

3 weeks ago 6

தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குனராக சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள படம் ‘நீல நிறச் சூரியன்’. ‘ IFFI -23, மற்றும் பல உலக திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று, உலக சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் நல்ல சினிமாக்களை விரும்பும் அனைவரும் பாராட்டிய படமாக இது உருவாகி இருக்கிறது.“ஒரு ஆண் பெண்ணாக மாற விரும்புவது குறித்து மட்டுமில்லாமல் நம் சமுதாயம் எப்படி அவர்களை பார்க்கிறது? எப்படி அதை கடந்து இவர்கள் சாதிக்கிறார்கள் என்பதை எந்தவிதமான நாடகத்தன்மையும் இல்லாமல் கொடுக்க விரும்பினேன்” என்கிறார் சம்யுக்தா விஜயன்.‘ திருநங்கை, திருநம்பி இந்தப் பெயர்கள் இரண்டுமே சமூகம் அவர்களுக்கு கொடுத்த பெயர்தானே தவிர அவர்கள் விருப்பப்பட்டு பயன்படுத்திக் கொள்வதில்லை.

அதிலும் தமிழில் தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை நிமித்தமான பெயராக இருக்கின்றன. மற்ற மாநிலங்களில் இன்னமும் கிண்டல்களாகத்தான் பார்க்கப் படுகிறது. ஒரு மனிதர் உடல் ரீதியாக தான் ஆணாக இருக்க வேண்டுமா அல்லது பெண்ணாக இருக்க வேண்டுமா என்பதை முடிவெடுக்க சட்டப்படி உரிமை உண்டு. மேலை நாடுகளில் ஆண் மற்றும் பெண் என இரு பாலினமாகவே மட்டுமே அடையாளப்படுத்தப்படுகிறார்கள். நான் தென்கொரியாவில் வேலை பார்த்த போதும் சரி இப்போது கலிபோர்னியாவில் வேலை செய்யும் பொழுதும் சரி என்னை பெண்ணாகவும் பெண்ணுக்குரிய வசதிகளை பயன்படுத்திக் கொள்ளும்படியான சூழலில் தான் அங்கே எல்லாம் நடத்துகிறார்கள். ஆனால் இங்கே மூன்றாம் அல்லது நான்காம் பாலினம் என தனித்தனியாக பிரித்து அதற்கு பெயர் கொடுத்து வைத்திருக்கிறோம். ஆணோ, பெண்ணோ , மாற்றுத்திறனாளிகளோ, பாலினம் மாற்றம் உள்ளவர்களோ யாராயினும் அவர்களுக்காக கொடுக்கப்பட்டுள்ள சலுகைகள் அல்லது வசதிகள் இவை அனைத்தும் தேவைப்படுவோர் பயன்படுத்தி கொள்ளட்டும் தேவை இல்லை என்கிற பட்சத்தில் அதையும் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ அழுத்தமாக சொல்லும் சம்யுக்தா விஜயன் தன்னைக் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

‘எனக்கு சொந்த ஊர் பொள்ளாச்சி. நடுத்தர குடும்பத்தில் தான் பிறந்தேன். நான் என்னவாக இருக்க விரும்பினேனோ அப்படியே என் குடும்பம் என்னை ஏற்றுக்கொண்டது. சிறு வயதில் முறைப்படி பரதநாட்டியம் கற்றுக் கொண்டேன். விருப்பப்பட்ட படிப்பை படித்து ஐடி துறையிலும் வேலைக்கு சேர்ந்தேன். இப்போ வருடத்துக்கு 5 கோடி வரையிலும் நான் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எல்லாருக்கும் இதே மாதிரி வாழ்க்கை இருக்கா என கேட்டால் இப்பதான் மாற ஆரம்பிச்சிருக்கு. மாறிகிட்டு இருக்க சமூகத்துக்கு தேவையான படமா தான் இந்த படத்தை நான் எடுத்து இருக்கேன்.
– மகளிர் மலர் குழு

‘நீல நிறச் சூரியன்’!

ஹ்ம்ம்ம்… என்னும் குரல் பயிற்சியுடன் ஆரம்பிக்கிறது ‘ நீல நிற சூரியன் ‘ படத்தின் கதை. அரவிந்த் என்னும் இளைஞன் , ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். உடலால் , மனதால் தனக்குள் இருக்கும் பானு என்கிற பெண்ணை வெளிப்படுத்தி முழுமையான பெண்ணாக மாறத் துடிக்கிறார். இவ்வேளையில் அவருக்கு வீட்டில் பெண் பார்க்கும் படலமும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அரவிந்தோ தான் பானுவாக மாறுவதற்கான அத்தனை ஆயத்த வேலைகளும் செய்து கொண்டிருக்கிறார். சிகிச்சை முறைப்படி முழுமையாக பெண்ணாக மாறுவதற்கு முன்பு மனதளவில் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவத்தில் கட்டாயம். முதலில் உன்னை நீ ஏற்றுக்கொள் பெண்ணாக உன்னை வெளி உலகுக்கு காட்டத் தயங்கும் வரையிலும் இந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பதையும் தெளிவாக எடுத்து வைக்கிறது ‘ நீல நிற சூரியன்’. ஒவ்வொரு கட்டமாக தனக்குள் இருக்கும் பானுவை அரவிந்த் வெளிக் கொண்டு வந்தாரா என்பதுதான் இப்படத்தின் கதை. பொதுவாகவே பாலின பாகுபாடு குறித்தபடங்கள் அனைத்தும் குடும்பத்துடன் அல்லது குழந்தைகளுடன் பார்க்க முடியாத படங்களாகவே இருக்கும் பட்சத்தில் இந்தப் படம் எவ்வித முகம் சுழிக்கும் காட்சிகளோ அல்லது வசனங்களோ எதுவும் இல்லாமல் உண்மையில் சமூகம் எதைக் கற்றுக்கொள்ள வேண்டும் எதற்கு தயாராக வேண்டும் என்பதை இந்த படம் எளிமையாக சொல்லி இருக்கிறது.

மேலும் திருநங்கைகள் என்றால் இப்படித்தான் வாழ வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்றில்லாமல் நாமும் நமக்கான வாழ்க்கை முறையை மேம்படுத்த வேண்டும் அதற்கான சில நடவடிக்கை களையும் எடுத்தாக வேண்டும் என்பதையும் இப்படம் தெளிவுபடுத்துகிறது. பெயர் மாற்ற பதிவாளர் அலுவலகத்தில் பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் நிற்க வெளியில் வரும் பானுவை பார்த்து ‘குழந்தையை ஆசீர்வாதம் செய்யுங்க’ எனச் சொல்வார். அதற்கு சற்றும் தயாராக இல்லாதவராக அதை கடந்து சென்று விடுவார் பானு. சமுதாயத்தில் நன்கு படித்து நல்ல வேலையில் இன்று எத்தனையோ திருநங்கைகள் இருக்கும் பட்சத்தில் இனி அவர்களுக்கான அடையாளமும் அங்கீகாரமும் மாறவேண்டும் என்பதை அந்த ஒரு காட்சி சொல்லி விடும். இதுவரையிலும் திருநங்கை, திருநம்பி குறித்து படங்கள் வந்தாலும் ஆண், பெண் என பாலின அடையாளம் வேண்டாம் என இரண்டையும் நிராகரிக்கும் நான் – பைனரி நபர் குறித்தும் சொல்ல தவறவில்லை இந்த படம்.

The post நாம் யார் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்… : சொல்கிறார் சம்யுக்தா விஜயன்! appeared first on Dinakaran.

Read Entire Article