விழுப்புரம்: நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் மணிகண்டன் விலகியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாம் தமிழர் கட்சியில் கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறேன். ஒன்றிய செயலாளர், மாவட்ட இளைஞரணி செயலாளர், மாவட்ட பொருளாளர், தற்போது நடுவர் மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்தேன். 2 நாடாளுமன்ற தேர்தல், 1 சட்டமன்றத் தேர்தல், 1 உள்ளாச்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் சிறப்பாக வேலை செய்தோம்.
சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி வாக்கு சேகரிப்பு செய்தேன். கிளை ஒன்றியம், தொகுதி, மாவட்ட பாசறை என அனைத்து கட்டமைனைப்பையும் செய்தேன். நான் செய்த வேலையை விட்டுவிட்டு முழு கட்சி பணிக்காக இறங்கி பணியாற்றினேன். செய்த செயல்கள், உடல் உழைப்பு மற்றும் பண விரயம் இவை எவையும் தலைமை பொருட்படுத்தும் படி இல்லை. 2022ல் பிரபாகரன் பிறந்தநாள் செஞ்சியில் நடந்தது. அன்று தான் என் திருமணம் நடந்தது. அதற்காகவே என் திருமணத்தை அன்று நடத்தினேன்.
பிரபாகரன் பிறந்தநாளுக்கு சீமான் வருவார் என எனது மண்டல செயலாளர் மூலமாக கூறியதில் அடிப்படையில் திருமணத்துக்கும் வருவார் என்று திருமணத்தை வைத்தேன். அதற்கு மிக சிரமப்பட்டு எங்கள் மண்டல செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மூலமாக அவரை வரவழைத்தேன். அதுவே எனக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது. கடைசியாக நடந்த நிகழ்ச்சியில் கூட சொன்ன வார்த்தைகள் எனக்கு மன வேதனையை கொடுத்தது. எனவே மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுகிறேன்.
இது நாள் வரை என்னுடன் பணியாற்றிய அனைத்து பொறுப்பாளர்களுக்கு, உறவினர்களுக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 2 மாவட்டச் செயலாளர்கள் நாதகவில் இருந்து விலகிய நிலையில் தற்போது மேலும் ஒருவர் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவதால் கட்சி தலைமை கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
The post நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் மணிகண்டன் விலகல் appeared first on Dinakaran.