சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சட்டவிரோதமாக கூடுதல், மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். சீமான் வீட்டில் உருட்டுக்கட்டைகளுடன் இருந்த 150 ஆண்கள், 30 பெண்கள் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தந்தை பெரியார் குறித்த அநாகரிக பேச்சிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுவரை ஆதாரம் அளிக்காததால் அவரது வீடு முற்றுகையிடப்படும் என்று தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார்.
அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் முற்றுகையிட முயன்றனர். காவல் துறையினர் அமைத்த தடுப்புகளை மீறி அவர்கள் செல்ல முயன்றனர். மேலும், சீமான் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், உருவ பொம்மையை எரித்தும் பெரியாரிய உணர்வாளர்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்
இதையடுத்து தடுப்புகளை மீறி செல்ல முயன்ற பெரியாரிய உணர்வாளர்களை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, சீமான் வீட்டை முற்றுகையிட்டு போராட வந்த பெரியாரிய ஆதரவாளர்களை தாக்குவதற்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சீமான் வீட்டு முன்பு உருட்டுக்கட்டையுடன் திரண்டு இருந்தனர்.
இந்த நிலையில், சென்னை நீலாங்கரை காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சீமானுக்கு ஆதரவாக அவரது வீட்டில் உருட்டுக்கட்டையுடன் திரண்ட 150 ஆண்கள், 30 பெண்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், மிரட்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
The post நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நீலாங்கரை போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.