"நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால்.. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே தூக்கிவிடுவேன்.." - சீமான்

3 months ago 20

ஈரோடு,

நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.

இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "திராவிடம் என்ற சொல்லை எடுத்ததற்கு இவ்வளவு கொதிக்கின்றனர். ஆனால், 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் மொழியை உயிரற்ற நிலையில் வைத்திருப்பதற்கு ஒருவருக்கும் கோபம் வரவில்லை. நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் பாட்டு தூக்கப்படும்.

அதற்கு என்ன செய்வார்கள் இந்த திராவிடர்கள். வரலாற்றில் ஆரியம் கண்டாய்.. தமிழன் கண்டாய்.. என்று உள்ளது. திராவிடத்தை வேண்டுமென நுழைத்து விட்டு மூன்று சதவீதம் உள்ள பிராமணர்களைக் காட்டி 30 சதவீத திராவிடர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். மாநில தன்னாட்சி பேசி வந்த நிலையில் கல்வி, மொழி, வரி, மருத்துவம் போன்ற அனைத்து உரிமைகளையும் மத்திய அரசிடம் பறிகொடுத்துவிட்டு தற்போது மாநில உரிமைகளை பற்றி பேசுவது என்ன நியாயம்..?

தமிழ்த் தேசியம் என்றால் என்ன என்று சொல்வதற்கு நாங்கள் தயார். அதேபோல், திராவிடம் என்றால் என்னவென்று சொல்ல யாரேனும் தயாராக உள்ளனரா..? கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட நாகரிகம் தமிழர் நாகரிகம் என்று தான் சொல்லப்படுகிறது. ஆனால், ஆட்சியில் உள்ளவர்கள் திராவிட நாகரிகம் என்று சொல்கிறார்கள்.

கவர்னரை மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் திட்டமிட்டே தி.மு.க. இதை கையில் எடுத்து செய்துவருகிறது. ஒருவேளை கவர்னரை மாற்றிவிட்டால் நாங்கள் கொந்தளித்ததால்தான் மாற்றினார்கள் என்று தி.மு.க.-வினர் சொல்வார்கள்.

தீபாவளிக்கு தற்காலிகமாக 1,500 மதுக் கடைகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதை திசை திருப்பவே தாய்த் தமிழ் வாழ்த்துப் பாடலில் திராவிடம் விடுபட்டுவிட்டது என்று பெரிதாக்கப்பட்டுள்ளது. இந்தியை எதிர்க்க துணிவு இல்லை. தி.மு.க.வினர் நடத்தும் பள்ளியில் இந்தி இரண்டாவது மொழியாக உள்ளது. இந்தியை எந்த எதிர்ப்பும் இல்லாமல் தமிழகத்தில் நுழையவிட்டது திராவிட ஆட்சிகள்தான்.

இந்தியை திணித்த காங்கிரசுடன் அரசியல் லாபத்திற்காக கூட்டணி வைத்ததால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் இந்தி தமிழகத்தில் வந்துவிட்டது. நாம் தமிழர் கட்சி ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தூக்கிவிட்டு திறமையான பாவலர்களை வைத்து நல்ல பாடல்களை எழுதுவேன்.

தமிழகத்தில் எப்போதோ அரசியலில் ஆன்மிகம் கலந்து விட்டது. முருகனுக்கு மாநாடு போட்டது யார்..? பூஜை அறையில் துர்கா ஸ்டாலின் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்கிறார். அத்திவரதரை குடும்பத்துடன் கும்பிட்டது யார்..? பதவியேற்பின்போது நேரம், நட்சத்திரம் பார்த்தது யார்..? இப்படி கேள்விகளை அடுக்கி கொண்டே போகலாம். ஆனால், தி.மு.க.விடம் இதற்கு பதில்தான் வராது.

விஜய் வளர்ந்துவிடுவார் என்ற பயத்தில்தான் அவரது மாநாட்டுக்கு இவ்வளவு தொந்தரவை தி.மு.க. கொடுக்கிறது. சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு நடத்தும்போது கட்டுப்பாடு விதிக்கவில்லை. ஆனால் விஜய் நடத்தினால் இவ்வளவு இடையூறு செய்வது ஏன்..? நடிகர் விஜய் என்னை எதிர்த்து வேலை செய்தாலும் அவரை ஆதரிப்பேன். ஏனென்றால் அவர் என்னுடைய தம்பி" என்று சீமான் கூறினார். 

Read Entire Article