நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் நடைபாதை கடைகள் அகற்றம்

2 weeks ago 2

நாமக்கல், ஜன.22: நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி கமிஷனர், பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த நடைபாதை கடைகளை அகற்ற உத்தரவிட்டார்.
நாமக்கல் மாநகராட்சி 2வது வார்டு முதலைப்பட்டியில், கடந்த நவம்பர் மாதம் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பொதுமக்கள், கல்லூரி மாணவ-மாணவியர் மற்றும் வயதானவர்கள் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநகரில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்டுக்கு எப்போதும் செல்லும் வகையில், போக்குவரத்துக் கழகம் கூடுதல் அரசு டவுன் பஸ்களை இயக்கி வருகிறது. புதிய பஸ் ஸ்டாண்டுக்கு, வெளியூரில் இருந்து பஸ்கள் வரும் முக்கிய இடங்களில், மாநகராட்சி நிர்வாகம் புதிய ஸ்டாப்களுடன் பயணிகள் நிழற்கூடங்களை ஏற்படுத்தியுள்ளது.

வட்டார போக்குவரத்து துறையினர், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து கரூர் மற்றும் ஈரோடு, திருச்செங்கோடு, மதுரை, கோயம்புத்தூர் போன்ற ஊர்களுக்கு வள்ளிபுரம், முதலைப்பட்டி பைபாஸ் வழியாக செல்லும்போது, இணைப்பு சாலையில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்லவேண்டும் என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதே போல், நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறையினரும் விபத்துக்களை தவிர்க்க பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் ஆட்டோ ஸ்டாண்ட், டாக்ஸி ஸ்டாண்ட் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதலைப்பட்டி ரவுண்டானா பகுதியில் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது. நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் 55 கடைகள், 2 ஓட்டல்கள் செயல்பட்டு வருகிறது. மேலும், பயணிகள் வசதிக்காக சைக்கிள் ஸ்டாண்ட், 3 கட்டண கழிப்பிடங்களை தனியாருக்கு டெண்டர் விட்டு நடத்தி வருகிறது.

இந்நிலையில், பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களை போக்கும் வகையில், நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, நேற்று திடீர் ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது, கட்டண கழிப்பிடம், சைக்கிள் ஸ்டாண்ட் பகுதிகளை பார்வையிட்டார். மாநகராட்சி நிர்ணயம் செய்த கட்டணம் மட்டுமே, பொதுமக்களிடமிருந்து ஒப்பந்ததாரர்கள் மூலம் வசூல் செய்யப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். மேலும், சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்து கொள்ளும்படி மாநகராட்சி ஒப்பந்தாரர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து அங்குள்ள 2 ஓட்டல்களை ஆய்வு செய்தார். ஓட்டலில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் மற்றும் பலகாரங்கள் சுகாதாரமான முறையில் செய்து கொடுக்க வேண்டும். அதிக விலைக்கு விற்பனை செய்யக் கூடாது. ஓட்டலை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து, பஸ் ஸ்டாண்டின் பல பகுதியில் உள்ள பல்வேறு கடைகளை கமிஷனர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.

அப்போது, கடைகள் முன் பயணிகளுக்கு இடையூறாக பொருட்களை குவித்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பொருட்களை கடைக்குள் வைக்கும்படியும், மக்கள் நடந்து செல்லும் பாதையில் பொருட்களை வைத்து கடையை நீட்டிப்பு செய்யக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், பயணிகளுக்கு இடையூறாக நடைபாதையில் இருந்த கடைகள் மற்றும் பொருட்கள் அகற்றப்பட்டது. இந்த ஆய்வின்போது, வருவாய் ஆய்வாளர் பிரசாத் மற்றும் சுகாதார ஆய்வாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் நடைபாதை கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article