நான்கு வழிச்சாலை – பழைய நெடுஞ்சாலை இணையும் புரவசேரி சந்திப்பில் ரவுண்டானா அமையுமா?

1 month ago 5

*தொடர் விபத்துகளால் பொதுமக்கள் அச்சம்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் நான்கு வழிச்சாலை, பழைய நெடுஞ்சாலை சந்திக்கும் புரவசேரி சந்திப்பில் டெம்போ, அரசு பஸ் மோதி விபத்து நடந்தது. இந்த பகுதியில் உடனடியாக ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் 20 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடைய வில்லை. தற்போது காவல்கிணறு சந்திப்பு முதல் நாகர்கோவில் அப்டா மார்க்கெட் வரையிலான நான்கு வழிச்சாலை பணிகள் மட்டும் முடிவடைந்து போக்குவரத்து நடந்து வருகிறது.

இதிலும் திருப்பதிசாரத்தில் சுங்கசாவடி உள்ளதால், இந்த நான்கு வழிச்சாலையை பெரும்பாலான வாகன ஓட்டிகள் பயன்படுத்துவது இல்லை. இன்னும் நாகர்கோவில் – காவல்கிணறு இடையிலான பழைய நெடுஞ்சாலையில் தான் அதிக வாகனங்கள் செல்கின்றன. இந்த நான்கு வழிச்சாலையும், பழைய நெடுஞ்சாலையும் புரவசேரி பகுதியில் சந்திக்கின்றன.

நான்கு வழிச்சாலை மற்றும் பழைய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் புரவசேரி சந்திப்பை கடக்கும் சமயங்களில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன.

குறிப்பாக நாகர்கோவிலில் இருந்து அப்டா மார்க்கெட் கடந்து, பழைய நெடுஞ்சாலைக்கு திரும்பும் வாகனங்களும், நான்கு வழிச்சாலையில் இருந்து அப்டா மார்க்கெட் நோக்கி நாகர்கோவில் நகருக்குள் வரும் வாகனங்களும் புரவசேரி சந்திப்பில் அடிக்கடி மோதி விபத்துக்களும், உயிர் பலிகளும் நடக்கின்றன.

எனவே இங்கு ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நான்கு வழிச்சாலை திட்ட வடிவமைப்பு படி, புரவசேரி சந்திப்பில் ரவுண்டானா அமைக்கப்பட வேண்டும். நகாய் சார்பில் இதற்கான உறுதிமொழியும் கொடுத்துள்ளனர்.

இதற்காகவே அந்த பகுதியில் தனியாரிடம் இருந்து நகாய் சார்பில் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. ஆனால் ரவுண்டானா அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது. இதன் காரணமாக நடக்கும் விபத்துக்களும், உயிர் பலிகளும் வாகன ஓட்டிகளை அச்சம் அடைய செய்துள்ளன.

நேற்று அதிகாலையிலும் விபத்து அரங்கேறியது. நாகர்கோவில் கோட்டாறு மார்க்கெட் பகுதிக்கு பலசரக்கு பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த டெம்போவும், வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சென்று கொண்டு இருந்த அரசு பஸ்சும், புரவசேரி சந்திப்பில் நேற்று அதிகாலை நேருக்கு நேர் மோதின.

இதில் டெம்போவின் முன் பகுதி நொறுங்கியது. பஸ்சின் முன் பக்க கண்ணாடியும் உடைந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர்.திடீர் பிரேக் அடித்ததில், பஸ்சுக்குள் இருக்கையில் இருந்து பயணிகள் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர்.

இதில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. டெம்போவில் கிளீனர் இருக்கை பகுதி அப்பளம் போல் நொறுங்கி சிதைந்தது. கிளீனர் யாரும் இல்லாததால், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. டெம்போ டிரைவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் கோட்டார் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

அரசு பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். டெம்போவில் இருந்த மளிகை பொருட்கள் மூடைகள், வேறு டெம்போ கொண்டு வரப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து, நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், புரவசேரி சந்திப்பு பகுதியில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த ரவுண்டானா அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். நகாய் சார்பில் (நெடுஞ்சாலைத்துறை ஆணையம்) ரவுண்டானா அமைக்கப்படும் என கூறி உள்ளனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. தொடர்ச்சியாக விபத்துக்களும், உயிர் பலிகளும் நடந்து வருகின்றன. ஆனால் நகாய் அதிகாரிகள் மவுனமாக உள்ளனர். விபத்துக்களை தடுக்க உடனடியாக ரவுண்டானா அமைக்கப்பட வேண்டும் என்றனர்.

ஆக்ரமிப்பை அகற்ற வேண்டும்

அப்டா மார்க்கெட் நான்கு வழிச்சாலை பகுதியில் இருந்து புரவசேரி சந்திப்பு வரை இணைப்பு சாலை உண்டு. இந்த இணைப்பு சாலை ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளது. டாரஸ் லாரிகளும், கார்களும், பைக்குகளும் நிற்கின்றன. இணைப்பு சாலை முழுமை அடையாமல் உள்ளது. இணைப்பு சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல், புத்தேரியில் இருந்து வரும் வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் நான்கு வழிச்சாலை மெயின் ரோட்டுக்கு வந்து தான் திரும்ப வேண்டி உள்ளது.

இதனால் அந்த பகுதியிலும் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. அப்டா மார்க்கெட்டில் இருந்து முறையாக இணைப்பு சாலை இருந்தால், அதன் வழியாக புரவசேரி கிராமத்துக்கு எளிதில் செல்ல முடியும். எனவே நெடுஞ்சாலைத்துறை ஆணையம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இணைப்பு சாலையில் ஆக்ரமிப்பை அகற்றி விரிவுப்படுத்தி வாகனங்கள் செல்ல வசதி செய்ய வேண்டும். இந்த பிரச்னை குறித்து கலெக்டருக்கும், நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கும் மனு அளித்து உள்ளோம் என்றும் பொதுமக்கள் கூறினர்.

The post நான்கு வழிச்சாலை – பழைய நெடுஞ்சாலை இணையும் புரவசேரி சந்திப்பில் ரவுண்டானா அமையுமா? appeared first on Dinakaran.

Read Entire Article