நான்கு ஜாமங்களில் வழிபட வேண்டிய நான்கு சிவாலயங்கள்

3 hours ago 2

அனைத்து சிவராத்திரிகளிலும் மிகவும் சிறப்புடையது மாசியில் வரும் மகாசிவராத்திரியாகும். ஒவ்வொரு கற்ப கால முடிவிலும் சிவபெருமான் பிரளயத்தை உருவாக்கி உயிர்கள் அனைத்தையும் சம்ஹரிக்கும் நாளே மகாசிவராத்திரியாகும். ஒவ்வோர் ஆண்டும் உத்தராயணத்தில் வரும் மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளன்று, இரவு 14-நாழிகைக்கு மேல் 16-நாழிகைக்குட்பட்ட வேளையே மகாசிவராத்திரியாகும். மகாசிவராத்திரி நான்கு கால பூஜைகளில், இரவு 11.30 மணிக்கு மேல் 1.00 மணி வரை நடைபெறும் சிவபூஜையே மிகவும் சிறப்புடையது. இந்த பூஜாக்காலம் லிங்கோர், பல காலம் எனவும் அவ்வபயம் செய்யப் பெறும் சிவபூஜை தரிசனம் ‘சிவ ரூப தரிசனம்’ எனப் பெறும். சிவராத்திரி காலங்களில் உளந்தூய்மையராய்ப் புறத் தூய்மையுடன் திருவைந்தெழுத்து ஓதல், சிவன் கோயில் தரிசனம், சிவபூஜை செய்தல், திருமுறைகளை ஓதல், கூட்டு வழிபாடு இயற்றுதல் ஆகியவற்றை மேற்கொள்வது மிகச் சிறந்த பலனைத் தரும். சிவராத்திரி பூஜை, அசுவமேதயாகம் செய்த பயனைத் தரும். பிரம்மாவிற்கு சரஸ்வதியும், திருமாலுக்கு லட்சுமியும், சக்கராயுதமும் கிடைக்கப் பெற சிவராத்திரி பூஜையே காரணமாகும். மகாசிவராத்திரி நான்கு ஜாமங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அவை:

மகாசிவராத்திரி முதல் ஜாம நேரம் இரவு 7.30 முதல் 9.30 மணி வரை.
மகாசிவராத்திரி 2-ம் ஜாம நேரம் இரவு 11.00 முதல் 12.30 மணி வரை.
மகாசிவராத்திரி 3-ம் ஜாம நேரம் அதிகாலை 2.30 முதல் 3.30 மணி வரை.
மகாசிவராத்திரி 4-ம் ஜாம நேரம் அதிகாலை 4.30 முதல் 6.00 மணி வரை.

இப்படி மகாசிவராத்திரி நான்கு ஜாமங்களாக உள்ளன. இந்த நான் ஜாமங்களிலும் சிவபெருமானுக்கு விதவிதமாக அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, நிவேதனம், ஆராதனையெல்லாம் விசேஷமாகச் செய்யப்படுகிறது. எல்லா சிவாலயங்களிலும் இம்முறைப்படியே பூஜைகள் நடைபெறும். தஞ்சை அருகில் மகாசிவராத்திரியுடனும், மகாபிரளய கால வரலாறுகளுடனும் தொடர்புடைய நான்கு சிவாலயங்கள் அமைந்துள்ளன. மகாசிவராத்திரியன்று நடைபெறும் நான்கு கால பூஜைகளில், ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தலத்திற்கும் சென்று வழிபடுவது அளவற்ற நற்பலன்களைத் தரும் என்று மகான்களும் சான்றோர்களும் அருளியுள்ளனர். அந்த வகையில்;

முதலாம் ஜாம வேளையில் “திட்டை அருள்மிகு வசிஷ்டேஸ்வரர்’’ திருக்கோயிலுக்கும்,
இரண்டாம் ஜாம வேளையில் “தேவராயன் பேட்டை அருள்மிகு மச்சபுரீஸ்வரர்’’
திருக்கோயிலுக்கும், மூன்றாம் ஜாம வேளையில் “பாபநாசம் அருள்மிகு 108 சிவாலயம் எனும் ராமலிங்க சுவாமி’’ திருக்கோயிலுக்கும், நான்காம் ஜாம வேளையில் “திருவைக்காவூர் அருள்மிகு வில்வவனேஸ்வரர் திருக்கோயிலுக்கும்’’

சென்று வழிபடுவது நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் நமக்குத் தரும் என்பர்.

மகாசிவராத்திரி முதல் ஜாமத்தில் (7.30 முதல் 9.00 வரை) வழிபட வேண்டிய தலம் அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், திட்டை

ஒரு யுகத்தின் முடிவில் உயிரினங்கள் அழிந்தன. மும்மூர்த்திகளும் மாயை வசப்பட்டு செய்வதறியாது திகைத்து பரம் பொருளைத் துதித்தனர். பரம் பொருள் அவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்து தேவியுடன் ஓர் இடத்தில் தோன்றினார். அப்போது ஒரு பிரம்மாண்டமான, நீரில் மூழ்காத திட்டுப் பகுதியும் தோன்றியது. அதில் ஜோதி மயமாக இருளை அகற்றும் சிவலிங்கம் தரிசனம் தந்தது. ஓடத்தில் வந்த இறைவனும் இறைவியும் மும்மூர்த்திகளிடம் இருந்த மாயையை அகற்றி வேத, வேதாந்த அறிவை அவர்களுக்கு அளித்தனர். அத்துடன் படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழில்களையும் மீண்டும் அவர்கள் செய்ய அருள்புரிந்தார்கள். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு மகாசிவராத்திரியில் முதல் ஜாம வேளையில் நடைபெற்றது. எனவே மகாசிவராத்திரியின் முதல் காலத்தில் வந்து வழிபட வேண்டிய ஆலயம் தஞ்சை அருகில் உள்ள திட்டை
வசிஷ்டேஸ்வரர் கோயில்.

மகாசிவராத்திரியில் இரண்டாம் ஜாமத்தில் (11.00 முதல் 12.30 வரை) வழிபட வேண்டிய தலம் அருள்மிகு மச்சபுரீஸ்வரர் திருக்கோயில், தேவராயன்பேட்டை

மற்றொரு மகாபிரளயம் நடந்தபோது, அச்சத்தில் பிரம்மன் மயங்கி விழுந்தார். அப்போது குதிரை முகம் கொண்ட ஹயக்கிரீவன் என்னும் அரக்கன், பிரம்மனிடமிருந்த படைப்புக்கு ஆதாரமான ருக், யஜுர், சாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்களையும் திருடிச் சென்று ஆழ்கடலுக்கடியில் மறைந்தான். பிரம்மனின் வேண்டுகோளுக்கு ஏற்ப பரந்தாமன் மச்ச அவதாரம் எடுத்து அரக்கனை அழித்து வேதங்களை மீட்டு வந்து பிரம்மனிடம் அளித்தார். ஆனால், பரந்தாமன், அசுரனை மீன் வடிவம் எடுத்துச் சென்று கொன்ற தோஷத்தின் காரணமாக அவரால் மீண்டும் சுய உருவம் அடைய முடியவில்லை. தேவராயன் பேட்டையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, ஒரு மகாசிவராத்திரியின் இரண்டாவது காலத்தில் பூஜை செய்து வழிபட்டு உய்வு பெற்றார். தோஷம் நீங்கிய பரந்தாமன், சுய உருவம் அடைந்தார். எனவே மகாசிவராத்திரியின் இரண்டாவது கால வேளையில் வழிபட வேண்டியது தேவராயன் பேட்டை
மச்சபுரீஸ்வரர் ஆலயம்.

மகாசிவராத்திரி மூன்றாம் ஜாமத்தில் (2.30 முதல் 3.30 வரை) வழிபட வேண்டிய தலம் ராமலிங்க சுவாமி திருக்கோயில் 108 சிவாலயம் பாபநாசம்.

ராவண யுத்தத்தில் பலரைக் கொள்ள நேர்ந்ததால் ராமபிரானுக்கு தோஷம் ஏற்பட்டது. எனவே ராமேஸ்வரத்தில் பூஜை செய்தவர், சீதை – லட்சுமணன் அழைத்துக் கொண்டு கீழ்த் திசை நோக்கி வந்தார். பாபநாசம் அருகில் வந்த போது கரன், தூஷன் என்ற இரண்டு அரக்கர்களை வதம் செய்த தோஷம் மட்டும் இன்னும் தன்னை விட்டு விலகாமல் இருப்பதை உணர்ந்தார். அந்த தோஷம் விலக, மகாசிவராத்திரி நாளில் சிவபூஜை செய்வது அவசியம் என்பதை உணர்ந்தவர், காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டு வருமாறு அனுமன் அனுப்பினார். அனுமன் வருவதற்குள் சீதாபிராட்டியார் ஆற்று மணலில் அமர்ந்து விளையாட்டாக சிவலிங்கங்களைச் செய்தார். அனுமன் வர கால தாமதமாகவே, ராமபிரான் சீதாதேவி உருவாக்கிய 107-சிவலிங்கங்களையும் பிரதிஷ்டை செய்து, பூஜிக்கத் துவங்கினார். அதற்குள் மகாசிவராத்திரியின் மூன்றாவது காலம் வந்துவிட்டது. அனுமன் பல தடைகளைத் தாண்டி வருவதற்குள் ராமபிரான் பூஜையைத் தொடங்கிவிட்டார். ஆனாலும், அனுமனிடம் அனுதாபம் கொண்ட ராமபிரான், 107-சிவலிங்கங்களுடன் அனுமன் கொண்டு வந்த லிங்கத்தை 108-வதாகப் பிரதிஷ்டை செய்தார். 107-சிவலிங்கங்களையும் தரிசனம் செய்து கடைசியாக அனுமன் காசியில் இருந்து கொண்டு வந்த 108-வது லிங்கத்தையும் தரிசனம் செய்தால்தான் 108-சிவாலயங்களை தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்று அருளினார். ஆக, மகாசிவராத்திரியின் மூன்றாம் கால வேளையில் பாபநாசம் ராமலிங்க சுவாமி திருக்கோயில், 108 சிவாலயம் சென்று வழிபட வேண்டிய தலம் இதுவாகும்.

மகா சிவராத்திரி நான்காம் ஜாமத்தில் (4.30 முதல் 6.00 வரை) வழிபட வேண்டிய தலம் அருள்மிகு வில்வனேஸ்வரர் திருக்கோயில், திருவைக்காவூர்.

கும்பகோணத்திற்கு வடக்கே 13-வது கிலோ மீட்டரில் உள்ளது திருவைக்காவூர் வில்வவனேஸ்வரர் ஆலயம். இத்தலம் மகாசிவராத்திரி வழிபாட்டுக்குரிய மிகவும் விசேஷமான தலமாகும். எமனைத் தடுப்பதற்காக நந்திகள் எல்லாம் திரும்பியுள்ள தலமாகும். நீலகண்ட வேடன் என்ற ஒரு வேடனின் விதிப்படி அவனுடைய ஆயுள் அன்று முடிய வேண்டும். இந்த நிலையில், அவன் வேட்டையாட துரத்திய மான் ஒன்று தப்பி வில்வவனேஸ்வரர் ஆலயத்திற்குள் நுழைந்தது. அங்கே தவம் செய்து கொண்டிருந்த தவநிதி முனிவர்மானுக்கு அபயம் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த வேடன், முனிவரை தாக்க முயற்சித்தான். முனிவர், சிவபெருமானைப் பிரார்த்திக்க, இறைவன் ஒரு புலியை ஏவி வேடனைத் துரத்தினார். புலிக்கு பயந்த வேடன், ஓடிச் சென்று ஒரு வில்வ மரத்தின் மீது ஏறினான். புலியும் அவ்விடத்தை விட்டு நகரவில்லை. வேடனை பசியும் மயக்கமும் வாட்டியது. மயங்கி கீழே விழுந்துவிட்டால் புலி அடித்துத் தின்று விடுமே என்ற எண்ணத்தில் அந்த வில்வ மரத்திலேயே நன்றாக அமர்ந்து கொண்டு அந்த மரத்திலிருந்த வில்வ இலைகளை, பொழுது போவதற்காக ஒவ்வொன்றாகப் பிய்த்து கீழே போட்டுக் கொண்டிருந்தான்.அந்த மரத்தின் கீழ் தவநிதி முனிவர் பூஜை செய்து வந்த சிவலிங்கம் இருந்தது. அவன் பிய்த்தெறிந்த வில்வ இலைகள் எல்லாம் அச்சிவலிங்கத்தின் மீதே விழுந்தன. அன்றைய தினம் மகாசிவராத்திரி. அதனால் வேடனுக்கு வில்வ இலைகளில் சிவபெருமானை அர்ச்சித்த புண்ணியம் கிடைத்தது. அப்போது மகாசிவராத்திரி நான்காவது காலம் நிறையும் வேளையில் வேடனின் ஆயுள் முடிய வேண்டும் என்பது விதி. ஆனால், மகாசிவராத்திரியில் உளன், உறக்க மின்றி வேடன் வில்வ இலைகளால் அர்ச்சித்து சிவனை வழிபட்ட புண்ணியத்தால், இறைவன் அருள் கிட்டியது. அப்போது அவன் உயிரைக் கொண்டு போக எமன் வரவே, சிவபெருமான் எமனை விரட்டி, பக்தனைக் காப்பாற்றி மோட்சமளித்தார். சிவராத்திரியின் நான்காம் காலத்தில் வழிபடவேண்டிய தலம் இந்தத் திருவைக்காவூர். இந்துக்களின் முழு முதற் கடவுளாகிய சிவபெருமானை எண்ணி முழுநாளும் வழிபடும் சிறப்பைப் பெற்றது மகாசிவராத்திரி. மகாசிவராத்திரியன்று நான்கு ஜாமங்களுக்கும் தனித் தனியான பூஜை முறைகள் பற்றி சிவபுராணத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. மகாசிவராத்திரி என்றால் மங்களகரமான இரவு என்று பொருள். எல்லா வகையான சிவராத்திரிகளிலும் மேலானதும், வருடம் ஒருமுறை மட்டும் வருவதும், அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி நல்வாழ்வைத் தருவதும் எல்லா நலன்களைத் தரக்கூடியதுமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமை பெற்றதுதான் ‘மகாசிவராத்திரி’மகாசிவராத்திரியின் சிறப்பை ‘வாதூலம்’ முதலான ஆகமங்களும் சிவபுராணம், கந்தபுராணம், பத்ம புராணம் முதலிய புராணங்களும் விரிவாக எடுத்துக் கூறுகின்றன. ‘சிவாயநம என சிந்திப் போருக்கு அபாயம் ஒரு போதும் இல்லை’ என்பது ஆன்றோர்வாக்கு சிவதரிசனம் செய்வதன் பலன் கூறும் பாடல் இது;

‘‘காலை தொழ அற்றை வினை விட்டகலும் கட்டுச்சி
வேளை தொழ இப்பிறப்பில் வெந்துயர்போம் மாலையில்
வந்து சிவன் தாளை வந்தித்தால்
ஏழ்பிறப்பின்
வெந்துயர் எல்லாம் விடும்!’’

டி.எம்.ரத்தினவேல்

The post நான்கு ஜாமங்களில் வழிபட வேண்டிய நான்கு சிவாலயங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article